செய்தி விவரங்கள்

அரீனா தாக்குதல்; தகவல்களை கசியவிட்டவர்கள் மீது டிரம்ப் கடும் ஆத்திரம்

பிரித்தானியாவின் மென்செஸ்டர் அரீனாவில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் தொடர்பான புலன்விசாரணைகள் தொடர்பான தகவல்களை கசியவிட்ட அமெரிக்க ஊடகங்கள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் ஆத்திரம் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க ஊடகங்களின் இந்த நடவடிக்கை மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்திருக்கின்றார்.

இந்த நிலையில் மென்செஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இதுவரை எட்டு பேர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக பிரித்தானிய பொலிசார் அறிவித்துள்ளனர்.

மென்செஸ்டர் அரீனாவில் கடந்த திங்கட்கிழமை இரவு அமெரிக்கப் பாடகி அரியானா கிறன்டேயின் இசை நிகழ்ச்சி இடம்பெற்ற போது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டதுடன் 116 பேர் காயமடைந்துள்ளனர்.

சல்மான் அபேதி என்ற 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இந்தத் தற்கொலைத் தாக்குதலை நடத்தியதாக பிரித்தானிய பொலிசார் உறுதிப்படுத்தியுள்ள நிலையில் அமெரிக்க ஊடகங்கள் தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் எடுக்கப்பட்ட நிழல் படங்களை கசிய விட்டுள்ளது.

அமெரிக்க ஊடகங்களின் இந்த நடவடிக்கை புலன்விசாரணைகளை குழப்பிவிட்டதாக கடும்ஆத்திரம் வெளியிட்டுள்ள பிரித்தானிய பிரதமர் திரேஷா மே இதனால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக புலன் விசாரணைகள் நீண்டகாலத்திற்கு இழுபடலாம் என்றும் கவலை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்துகொண்டுள்ள பிரசல்சில் நடைபெறும் நேட்டோ நாடுகளின் உச்சி மாநாட்டிற்கு சென்றுள்ள நிலையிலேயே பிரித்தானிய பிரதமர் திரேஷா மே அமெரிக்க ஊடகங்களின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்திருக்கின்றார்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் அமெரிக்க ஊடகங்களின் செயலை கண்டித்துள்ளார். அமெரிக்க ஊடகங்களின் இந்த நடவடிக்கை தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் என்று சுட்டிக்காட்டிய ட்ரம்ப் நிழல்படங்களை கசிய விட்ட விவகாரத்தை ஆதி முதல் அந்தம் வரைவிசாரிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

நீதித்துறை திணைக்களம் மற்றும் தொடர்புடைய அனைத்து திணைக்களகங்களுக்கும் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவுக்கும் – அமெரிக்காவுக்கும் இடையில் நீண்டகாலமாக நெருங்கிய உறவு இருப்பதாகத் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் அதனை சீர்குழைக்க எவருக்கும் இடமளிக்க முடியாது என்றும் திட்டவடடமாக அறிவித்துள்ளார்.

மென்செஸ்டர் அரீனா தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் புலனாய்வு விசாரணைகளை மேற்கொண்டுவரும் படையினர் இதுவரை எட்டு பேரை கைதுசெய்துள்ளதாக பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் சுற்றிவளைப்புத் தேடுதல்களில் பல முக்கிய ஆதாரங்களும் சிக்கியுள்ளதாகவும் குறிப்பிட்ட பொலிசார் இது பாரிய முன்னேற்றம் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையிலேயே அமெரிக்காவின் நிவயோர்க் டைம்ஸ் பத்திரிகை தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் எடுக்கப்பட்ட மிக முக்கியமான நிழல்படங்களை வெளியிட்டுள்ளது.

தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்ற இடத்திலுள்ள சிதைவுகள் மற்றும் இரத்தம் படிந்த குண்டின் பாகங்கள் அதற்கான தோள் பட்டிகளும் உள்ளடங்கியுள்ளன.

இது குறித்து பெரும்அதிர்ச்சியை வெளியிட்ட மென்செஸ்டர் பொலிசார் அமெரிக்காவுடன் தகவல்களை பறிமாறிக்கொள்வதை முழமையாக நிறுத்திக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

தற்கொலைத் தாக்குதல் தொடர்பான நிழல்படங்களை கசிய விடடதன் ஊடாகஇடம்பெறும் புலன்விசாரணைகள் பாதிக்கப்படுவது மாத்திரமன்றி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் பெரும் அழுத்தத்தை கொடுப்பதாக அமைந்துள்ளது என்றும் மென்செஸ்டர் தலைமை பொலிஸ் கான்ஸடபிள் தெரிவித்தார்.

புகைப்படங்கள் கசிய விடட விவகாரம் தொடர்பில் பிரசல்சில் வைத்து அமெரிக்க அதிபருடன் விரிவாக ஆராய்வதாகத் தெரிவித்த பிரித்தானிய பிரதமர் திரேஷா மே இது குறித்த பிரித்தானியாவின் கடுமையான எதிர்ப்பையும் வெளியிடுவதாகவும் அறிவித்துள்ளார்.

எனினும் அமெரிக்காவின் சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பான கடடமைப்புக்களை விட வெள்ளை மாளிகையான அதிபர் மாளிகை ரகசியப் புலனாய்வுத் தகவல்களை கசிய விடுவதில் முன்னிலையில் இருப்பதாக பிரித்தானிய அதிகாரிகள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இதனாலேயே உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அமெரிக்கவுடன் தகவல் பறிமாற்றங்களை நிறுத்திக்கொள்ள பிரித்தானிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர்.

இதேவேளை பிரித்தானிய மகாராணியார் இன்று மென்செஸ்டர் தற்கொலைத் தாக்குதலில் காயமடைந்த நிலையில வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்றுவருபவர்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

மென்செஸ்டர் தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்திய மகாராணியார் தாக்குதலுக்கு முகம்கொடுத்த விதம் தொடர்பில் தனது பாராட்டையும் அதிகாரிகளுக்கு தெரிவித்துக்கொண்டுள்ளார்.

முன்னதாக மென்செஸ்டர் தாக்குதலில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இன்று ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மென்செஸ்டர் நகரிலுள்ள அனைத்து அலுவலகங்கள் வீடுகள் மற்றும் பொது இடங்களில் மக்கள் மௌன அஞ்சலியை செலுத்தினர்.

மென்செஸ்டர் புனித ஏன் சதுக்கத்தில் மௌன அஞ்சலி முறைப்படி அனுட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் மென்செஸ்டர் அரீனா தற்கொலைத் தாக்குதலை நடத்திய 22 வயதுடைய சல்மான் அபேதியின் லிபியாவை பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தினருக்கும் இந்தத் தாக்குதலுக்கு பங்கிருப்பதாக பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதனாலேயே அபேதியின் சகோதரரான 23 வயதுடைய இஸ்மயில் உட்பட எட்டு பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் அறிவித்திருககின்றனர்.

சல்மான் அபேதியின் இளைய சகோதரரான 20 வயதுடைய ஹசீம் மற்றும் அவரது தந்தையான ரமடான் ஆகியோர் தற்போது லிபியாவின் ரிப்போலி நகரில் இருப்பதால் அவர்களை கைதுசெய்வதற்கும் பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதனைத்தவிர மென்செஸ்டரில் தொடர்ந்தும் பல இடங்களில் சுற்றிவளைப்புத் தேடுதல்கள் இடம்பெற்று வருகின்றன.

திங்கட்கிழமை இடம்பெற்ற தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டதுடன் 116 பேர் காயமடைந்துள்ளனர். 75 பேர் இன்னமும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 23 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு