செய்தி விவரங்கள்

பிரக்சிற் நடவடிக்கையின் விவாதக்களமாக மாறுகிறதா பிரித்தானிய பொதுத்தேர்தல் ?

யூன் எட்டாம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொ்ர்பான விவாதக் களமாக மாற்றிக்கொள்ளுமாறு வாக்காளர்களிடம் பிரித்தானிய பிரதமர் திரேஷா மே கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற தொலைக்காட்சி விவாதத்தை பகிஸ்கரித்தது தொடர்பில் கடுமையான விமர்சனங்களுக்கு முகம்கொடுத்துள்ள கன்சவேடிவ் கட்சியின் தலைவரான பிரதமர் திரேஷா மே தனக்கு தொலைக்காட்சி விவாதத்தை விட மகத்தான வாய்ப்புகள் கிடைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

பீ.பீ.சி தொலைக்காட்சி நேற்றைய தினம் பொதுத்தேர்தலை முன்னிட்டு கட்சித் தலைவர்கள் கலந்துகொண்ட நேரடி தொலைக்காட்சி விவாதமொன்றை நடத்தியது.

இதில் தொழிற்கட்சியின் தலைவர் ஜெரமி கோபின் உட்பட அனைத்துக் கட்சிகளினதும் தலைவர்கள் கலந்துகொண்ட போதிலும் கன்சவேடிவ் கட்சியின் தலைவியான பிரதமர் திரேஷா மே கலந்துகொள்ளவில்லை.

இதனால் தொழிற்கட்சியின் தலைவர் உட்பட எதிர்கட்சியினர் திரேஷா மே யை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதனை நிராகரிக்கும் திரேஷா மே தொழிற்கட்சியின் தலைவர் ஜெரமி கோபினுக்கு நாட்டின் பிரதமர் பதவியை வகிப்பதற்கான தகுதி இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொழிற்கட்சியின் தலைவராக சமாளித்துப் போய்க்கொண்டிருப்பதாகவும் திரேஷா மே குற்றம்சாட்டியுள்ளார்.

இதனை முற்றாக நிராகரிக்கும் தொழிற்கட்சியின் தலைவர் ஜெரமி கோபின் திரேஷா மே உட்பட கன்சவேடிவ் கட்சியினர் பிரெக்சிட் பேச்சுக்களை முன்னிலைப்படுத்தி பதற்றமான ஒரு சூழலை உருவாக்கி வாக்காளர்களை அச்சுறுத்தி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த நிலையில் இன்று கன்சவேடிவ் கட்சியின் தலைவியான பிரதமர் திரேஷா மே பிரெக்சிட் தொடர்பான தனது திட்டத்தை பகிரங்கப்படுத்தியுள்ளார். பிரித்தானிய மக்களுக்கு அதிக நன்மை கிட்டக்கூடிய வகையில் தனது பிரெக்சிட் பேச்சுக்கள் அமையும் என்றும் திரேஷா மே உறுதியளித்துள்ளார்.

யூன் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் கன்சவேடிவ் கட்சிக்கு வாக்களித்து மீண்டும் ஆட்சிபீடம் ஏற்றுவதன் மூலமே பிரித்தானியாவின் எதிர்காலம் தங்கியிருப்பதாகவும் பிரதமர் மே தெரிவித்துள்ளார்.

பிரெக்சிட் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்து பிரித்தானியாவை பலமான நாடாக கட்டியெழுப்புவேன் என்றும் பிரித்தானிய பிரதமர் திரேஷா மே சூளுரைத்திருக்கின்றார்.

பிரித்தானியாவில் பொதுத் தேர்தல் நடைபெவதற்கு ஒரு வாரகாலமே எஞ்சியுள்ள நிலையில் கன்சவேடிவ் கட்சிக்கும் – பிரதான எதிர் கட்சியான தொழிற் கட்சிக்கும் இடையிலான அடைவெளி குறைந்துவரும் நிலையிலேயே திரேஷா மே தொழிற்கட்சியின் தலைவர் ஜெரமி கோபினுக்கு அதிகாரித்துவரும் மக்களின் செல்வாக்கிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் பிரசாரங்களை தீவிரப்படுத்தியிருக்கின்றார்.

 

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு