செய்தி விவரங்கள்

ட்ரம்பிற்கு பிரதமர் மோடி அளித்த அரிய இந்திய பரிசுகள்.!

இந்திய பிரதமர் மோடி மூன்று நாள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் இன்று சந்திப்பு மேற்கொண்டார். அப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் அவரது மனைவியும் இந்திய பிரதமர் மோடியை வரவேற்று வெள்ளை மாளிகையை சுற்றிக்காண்பித்ததோடு, அவர்களின் சார்பில் பிரதமருக்கு விருந்தும் அளிக்கப்பட்டது.

பின்பு, அதிபர் ட்ரம்ப்பிற்கு இந்தியாவிலிருந்து கொண்டு சென்ற பரிசுப் பொருள்களை வழங்கினார். 52 வருடங்களுக்கு முன்னர், 1965ல் அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கனின் நூற்றாண்டு நினைவு விழாவை முன்னிட்டு அவருக்கு தபால்தலை வெளியிட்டுச் சிறப்பித்தது இந்தியா. அந்த தபால்தலை வெளியீட்டின் அசல் முத்திரையை ட்ரம்பிற்கு வழங்கினார் மோடி.

அதிபர் ஆபிரகாம் லின்கன் மற்றும் மகாத்மா காந்தி ஆகிய இரு தலைவர்களும் பொதுமக்களின் அடிப்படை நன்மைகள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலையை அடிப்படையாகக்கொண்டு செயல்பட்டவர்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும்,காங்க்ரா பள்ளத்தாக்கிலிருந்து புகழ்மிக்க தேயிலை மற்றும் தேன், ஹிமாச்சலப்பிரதேசத்திலிருந்து வெள்ளிக் காப்பு ஆகியவை அடங்கிய ஒரு பெட்டியை வழங்கினார்.  ட்ரம்ப்பின் மனைவி மெலானியாவுக்கு காஷ்மீர் மற்றும் ஹிமாச்சலப்பிரதேசத்திலிருந்து கைகளால் நெய்த சால்வைகளைப் பரிசாக வழங்கினார்.

முன்னதாக இருநாட்டு தலைவர்களின் சந்திப்பிற்கு பிறகு இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிப்போமென அவர்கள் பேட்டியளித்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு