செய்தி விவரங்கள்

இஸ்ரேல் – பாலஸ்தீனத்திற்கும் இடையிலான சமாதானத்திற்கு அமெரிக்கா உதவி செய்யும்

இஸ்ரேலுக்கும் – பாலஸ்தீனத்திற்கும் இடையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு தன்னாலான அனைத்தையும் செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார்.

பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாசுடன் நடைபெற்ற சந்திப்பை அடுத்து அமெரிக்க அதிபர்இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். அதேவேளை பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாலஸ்தீனம் முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மத்திய கிழக்கிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் இறுதிநாளான இன்று பாலஸ்தீனத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாசிற்கும் இடையிலான சந்திப்பு பெத்லஹேம் நகரில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் பின்னர் இரு நாட்டு ஜனாதிபதிகளும் இணைந்து ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் நடத்தினர்.

இதன்போது பெத்லஹேம் நகரில் விஜயம் செய்ததால் தனக்கு புதிய உத்வேகம் கிடைத்துள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.

அத்துடன் இஸ்ரேல் – பாலஸ்தீனத்திற்கு இடையில் சமாதானத்தை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக குறிப்பிட்ட டொனல்ட் டிரம்ப் இஸ்ரேல் – பாலஸ்தீன சமாதானத்திற்காக தன்னாலான அனைத்தையும் செய்வதாகவும் உறுதியளித்தார்.

பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாசும் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்துள்ளதாகவும் குறிப்பிட்ட டொனால்ட் டிரம்ப் அதேபோல் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் உறுதியளித்திருப்பதாகவும் கூறினார்.

வன்முறைகளை சகித்துக்கொள்ளும் நிலமைகள் மற்றும் வன்முறைகளுக்க ஊக்கமளித்து கௌரவப்படுத்தும் நடவடிக்கைகள் தொடரும் நிலையில் ஒருபோதும் சமாதானத்தை அடைய முடியாது என்று குறிப்பிட்டுள்ள அமெரிக்க அதிபர் பயங்கரவாதத்திற்க எதிராக போராட மன்வருவதுடன் கடும்போக்காளர்களை ஓரம்கட்டவும் நடவடிக்கை எடுப்பதன் ஊடாகவே நிரந்தர சமாதானத்தை அடைய முடியும் என்றும் கூறியுள்ளார்.

மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்துவதில் உறுதிப்பாட்டை வெளிப்படுத்திய அமெரிக்க அதிபருக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட பாலஸ்தீன அதிபர் அப்பாஸ் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவதற்கு டிரம்ப் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் டொனால்ட் டிரம்பின் பாலஸ்தீனத்திற்கான விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து காஸாவில் மாத்திரமன்றி மேற்குக் கிரையிலும் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது இஸ்ரேலிய சிறைகளில் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாலஸ்தீன அரசியல் கைதிகளுக்கு ஆதரவாகவும் போராட்டங்களும் பேரணிகளும் பாலஸ்தீனத்தின் பல பகுதிகளில் இன்றும் இடம்பெற்றுள்ளன.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு