செய்தி விவரங்கள்

மகாராணியை சந்தித்தார் தெரேசா மே- கன்சர்வேட்டிவ் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்குமா?

பிரித்தானியாவின் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு கன்சவேடிவ் கட்சியின் தலைவரான பிரதமர் திரேஷா பிரித்தானிய மகாராணியாரை சந்தித்து அனுமதி கோரியுள்ளார்.

பிரித்தானியாவில் நேற்றைய தினம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையை நிரூபிக்க தவறிய போதிலும், ஜனநாயக யூனியன் கட்சியின் ஆதரவுடன் ஆட்சியை அமைப்பதற்காக பிரித்தானிய மகா ராணியை பக்கிங்காம் மாளிகையில் பிரித்தானிய நேரப்படி இன்று நண்பகல் 12.30 மணிக்கு சந்தித்து அனுமதி கோரியுள்ளார்.

நடைபெற்று முடிந்த தேர்தலில் பெரும்பான்மைப் பலத்தை இழந்ததை அடுத்து திரேஷா மேயை பதவி விலகுமாறு அழுத்தங்கள் தீவிரமடைந்து வருகின்றன. எனினும் இந்த அழுத்தங்களை புறந்தள்ளிவரும் பிரதமர் திரேஷா மே கன்சவேடிவ் கட்சி தலைமையிலான அரசாங்கத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின் படி எந்தவொரு கட்சியும் ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை பெற தவறிவிட்டன.

இதனால் பிரித்தானியாவில் தொங்கு பாராளுமன்றம் அமைந்துள்ளது.

650 தொகுதிகளில் இதுவரை 649 தொகுதிகளுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய கன்சர்வேட்டிவ் கட்சி 318 ஆசனங்களையும், ஜெரமி கோர்பின் தலைமையிலான தொழிற்கட்சி 261 ஆசனங்களையும் பெற்றுள்ளன.

இன்னும் ஒரு ஆசனத்திற்கான தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில் பிரித்தானியாவின் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி அந்த ஆசனத்தில் வெற்றிபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த தேர்தலின் போது கன்சர்வேட்டிவ் கட்சி 327 ஆசனங்களை பெற்றிருந்த நிலையில் இம்முறை 319 ஆசனங்களை மாத்திரமே பெறவுள்ளது.

எனினும் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு 326 ஆசனங்கள் தேவை என்ற நிலையில் கன்சர்வேட்டிவ் கட்சி 319 ஆசனங்களையே பெற்றுக்கொண்டுள்ளது. எனவே இந்த முறை இடம்பெற்ற தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க தவறியுள்ளது.

இது ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை நேற்றைய தேர்தலில் தற்போது வெளியாகியுள்ள முடிவுகளின் படி தொழிற்கட்சி 261 ஆசனங்களையும், ஸ்கொட்லாந்து தேசிய கட்சி 35 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளது.

கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் ஸ்கொட்லாந்து தேசிய கட்சி 21 ஆசனங்களை இழந்துள்ளது.

இதனால் ஸ்கொட்லாந்தின் சுதந்திரம் தொடர்பான நடவடிக்கைகளில் பின்னடைவுகள் ஏற்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மீண்டும் ஆட்சி அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள கன்சவேடிவ் கட்சியின் தலைவர் திரேஷா மே, வட அயர்லாந்தின் ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியின் ஆதரவைப் பெறும் முயற்சிகளிலும் திரேஷா மே தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

நேற்றைய தினம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் 318 ஆசனங்களையே திரேஷா மே யின் கன்சவேடிவ் கட்சி பெற்றது. எனினும் 650 ஆசனங்களைக் கொண்ட பிரித்தானிய நாடாளுமன்றில் ஆளும் கட்சியாக இருக்க வேண்டுமானால், 326 ஆசனங்களைப் பெற்றிருக்க வேண்டும்.

எனினும் கடந்த பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைக் கொண்டிருந்த கன்சவேடிவ் கட்சிக்கு மேலதிக பலத்தை திரட்டும் நோக்கில் ஆட்சிகாலம் முடிவடைவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே பொதுத் தேர்தலை கோரியிருந்த திரேஷா மே இருந்த பெரும்பான்மையையும் இழந்துள்ளார்.

இதனால் அவரை உடனடியாக பிரதமர் பதவியிலிருந்து வெளியேறுமாறு தொழிற் கட்சியின் தலைவர் ஜெரமி கோபின் வலியுறுத்தியுள்ளார். பிரித்தானியாவை பாதுகாப்பதற்காகவே தான் தொடர்ந்தும் பதவியில் இருப்பதாக பிரதமர் திரேஷா மே கூறிவரும் நிலையில் அந்தப்  பொறுப்பை தொழிற் கட்சி ஏற்கத் தயார் என்றும் ஜெரமி கோபின் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தொங்கு பாராளுமன்றமாக உருவாகியுள்ள பிரித்தானியாவில் ஒரு தரப்பு ஆட்சியமைக்கும் வரை பிரதமரான திரேஷா மேயும் அவரது கன்சவேடிவ் கட்சி அரசாங்கமும் தொடர்ந்தும் அதிகாரித்தில் இருக்கும். அவர்கள் பதவி விலகுவதாக தீர்மானிக்கும் வரை இந்த நிலை தொடரும் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

ஆனால் தற்போதைய நிலையில் எந்தவொரு கட்சியும் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மைப் பலத்தை பெறாததால் திரேஷா மே யின் கன்சவேடிவ் கட்சிக்கு அடுத்தப்படியாக ஆசனங்களை கைப்பற்றியுள்ள தொழிற் கட்சிக்கு ஆட்சி அமைக்கும் அனுமதியைக் கோருவதற்கும் சட்டத்தில் இடமுண்டு.

ஏற்கனவே பொதுத் தேர்தலில் 261 ஆசனங்களை பெற்று இரண்டாவது இடத்தை கைப்பற்றியுள்ள தொழிற்கட்சி சிறுபான்மை பலத்தைக் கொண்ட அரசாங்கமொன்றை அமைக்கத் தாங்கள் தயார் என அறிவித்துள்ளது.

இதேவேளை பிரதமர் திரேஷா மேயும் தொழிற் கட்சியின் தலைவர் ஜெரமி கோபினும் ஏற்கனவே கூட்டு அரசாங்கமொன்றை அமைக்கும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர்.

கூட்டணி அரசாங்கம் குறித்த பேச்சுக்களை நடத்துவதற்காக குழுக்களையும் அவர்கள் நியமித்துள்ளனர். இதற்கமைய சிறிய கட்சிகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் முயற்சிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.

இதற்கமைய 319 ஆசனங்களை கைப்பற்றக்கூடிய பிரதமர் திரேஷா மே பெரும்பான்மையை உறுதிப்படுத்துவாரானால் அவர் தொடர்ந்தும் பதவியில் நீடிப்பார்.

எனினும் இதனை அவரால் நிரூபிக்க முடியாது போனால் ஜெரமி கோபின் ஆட்சியமைக்க அனுமதி கோரமுடியும். அவ்வாறு இடம்பெறும் பட்சத்தில் திரேஷா மே பதவியிலிருந்து விலக வேண்டும். அதனையடுத்து ஜெரமி கோபின் பிரதமராக பதவியேற்பார்.

எனினும் திரேஷா மேயின் அறிவிப்பு வரும் வரை தொழிற்கட்சியின் தலைவர் பொறுமை காக்க வேண்டியதில்லை. திரேஷா மே தானாக  ராஜினாமா செய்வதற்கு முன்னதாக ஆட்சி அமைப்பதற்கத் தேவையான பெரும்பான்மைப் பலத்தை ஜெரமி கோபின் நிரூபிப்பாரானால் அவர் ஆட்சி அமைப்பதற்கான உரிமையை கோர முடியும்.

கூட்டணி ஆட்சியை அறிவிப்பதற்கு எந்தவொரு காலக்கெடுவும் இல்லாததால் கூட்டணிப்பேச்சுக்கள் மெதுவாக இடம்பெறால் என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் கடந்த 2010 ஆம் ஆண்டு இதே நிலமை ஏற்பட்டிருந்தபோது கன்சவேடிவ் கட்சியும் – லிபரல் ஜனநாயகக் கட்சியும் கூட்டணி சேர்ந்து ஐந்து நாட்களுக்குள் ஆட்சி அமைத்திருந்தனர்.

எனினும் புதிய பாராளுமன்றம் எதிர்வரும் 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கூடவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக புதிய அரசாங்கத்தை அமைப்பது யார் என்பதை அறிவிக்க வேண்டும். அதுவரை பிரதமர் திரேஷா மே காத்திருப்பார் என நம்பப்படுகின்றது.

ஆனால் தன்னால் ஆட்சி அமைக்க முடியாது விடடால் திரேஷா மே அன்றைய தினத்திற்குள் உறுதிப்படுத்தியாக வேண்டும்.

எவ்வாறாயினம் எதிர்வரும் 19 ஆம் திகதி பிரித்தானியாவின் புதிய அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரையை பாராளுமன்றில் மகாராணியார் அறிவிக்கவுள்ளதால் அதற்கு முன்னதாக ஆட்சியை யார் அமைப்பார்கள் என்பது தெரிந்துவிடும் என அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு