செய்தி விவரங்கள்

குடியேற்றவாசிகள் தொடர்பிலான தடையை உச்சநீதி மன்றம் மறுபரிசீலனை செய்யுமா?

இஸ்லாமிய நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு வரும் பயணிகள் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பினால் விதிக்கப்பட்ட தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அமெரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு வெள்ளை மாளிகை கோரிக்கை விடுத்துள்ளது.

ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா மற்றும் யேமன் ஆகிய நாடுகளிலிருந்து அகதிகளும், மக்களும் அமெரிக்காவினுள் நுழைவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் விதிக்கப்பட்ட தடைக்கு அமெரிக்க நீதிமன்றங்கள் தற்காலிக தடை விதித்திருந்தது.

இந்த நிலையில் குறித்த தடைச்சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதேவேளை,கீழ் நீதிமன்றங்களினால் விதிக்கப்பட்ட தீர்ப்பை இரத்து செய்ய வேண்டும் என ஒன்பது உயர் நீதிமன்ற நீதிபதிகளிடம் ட்ரம்ப் நிர்வாகத்தினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து அமெரிக்க நீதித்துறை திணைக்கள செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவிக்கையில், இந்த முக்கியமான வழக்கை விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை கேட்டுள்ளதாக தெரவித்துள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி ட்ரம்பின் நிறைவேற்று ஆணை நாட்டை பாதுகாக்கவும் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கவே ட்ரம்ப் குறித்த தடை விதிக்கப்பட்டதாக தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு ஆபத்து இல்லை என்று ட்ரம்ப் தீர்மானிக்கும் வரையில், பயங்கரவாதிகள் மற்றும் ஆயுதக்குழுக்களுக்கு அடைக்கலம் அளிக்கும் மற்றும் ஊக்குவிக்கும் நாடுகளிலிருந்து மக்களை அமெரிக்காவினுள் அனுமதிக்க தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு