செய்தி விவரங்கள்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலிருந்து விலகுவது தொடர்பில் ஆராயும் அமெரிக்கா

இஸ்ரேல் குறித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் நடவடிக்கை காழ்ப்புணர்ச்சி மனப்பான்மையைக் கோடிட்டுக் காட்டுவதாக கடுமையான குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ள அமெரிக்கா அதன் காரணமாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலிருந்து விலகுவது பற்றி பரிசீலித்துக் கொண்டிருப்பதாக அறிவித்துள்ளது.

ஐநா  மனித உரிமைப் பேரவையில் அமெரிக்காவின் பங்கு குறித்து கவனமாக ஆராய்ந்து கொண்டிருப்பதாக ஐநாவிற்கான அமெரிக்கத் தூதுவர்  நிக்கி ஹேலி தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசேட கூட்டத் தொடரில் கலந்துகொண்ட ஐநாவிற்கான அமெரிக்கத் தூதுவர்  நிக்கி ஹேலி இஸ்ரேலுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கடுமையாக எதிர்த்தார்.

ஜனநாயக ரீதியில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள எதிர்கட்சியினருக்கு எதிராக கொடூரமான படைப் பலத்தை பிரயோகித்து தாக்குதல்களை நடத்திவரும் வெனிசுவேலாவுக்கு எதிராக எந்தவொரு தீர்மானத்தையும் பரிசீலிக்காத ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடான இஸ்ரேலுக்கு எதிராக ஐந்து தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கின்றது என்பத ஏற்றுக்கொள்வது கடினமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலை மட்டும் தவறான அடிப்படையில் விமர்சிக்கும் பழக்கத்தை மனித உரிமைகள் பேரவை நிறுத்தவேண்டும் என்றும் நிக்கி ஹேலி, கேட்டுக்கொண்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மேற்கொண்டிருக்கும்  பணிகளைப் பற்றி கோடிட்டுக் காட்டிய ஹேலி,  ஆனால் மிக மோசமான மனித உரிமை மீறல்களை மேற்கொண்டுவரும் ஈரானையோ அல்லது வெனிசுவேலாவையே விமர்சிக்காமை ஆச்சரியம் அளிப்பதாகவும் நிக்கி ஹேலி குற்றம்சாட்டியிருக்கின்றார்.

இதேவேளை ஜெனீவாவில் இன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் யூன் மாதத்திற்கான மூன்று வாரகால வருடாந்த கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயீத் ராத் அல் உசைன், பாலஸ்தீனத்தின் நிலப்பகுதிக்குள் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள ஆக்கிரமிப்புக்களை உடனடியாக முடிவுக்கு கொண்டவர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இஸ்ரேலின் இந்த நடவடிக்கை மூலமே அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக மத்திய கிழக்கில் தொடரும் மோதல்களுக்கு நிரந்தர தீர்வு கிட்ட வாய்ப்பு கிடைக்கும் என்றும் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு காரணமாக பாலஸ்தீன மக்கள் மிகவும் மோசமான பாதிப்புக்கள் மற்றும் துன்புறுத்தல்களுக்கு முகம்கொடுத்துள்ளதாகவும் ஆணையாளர் ராத் உசைன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இஸ்ரேல் பாலஸ்தீனத்திடமிருந்து ஆக்கிரமித்து வைத்துள்ள மேற்குக் கிரைப் பகுதியில் 1800 யூதக் குடியிருப்புகளை நிர்மாணிப்பதற்கான பாரிய திட்டத்திற்கு இஸ்ரேல் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

இஸ்ரேலின் இராணுவத்தினால் நிர்வகிக்கப்படும் மேற்குக் கரையின் சிவில் நிர்வாகமே இஸ்ரேலிய அரசாங்கம் மார்ச் மாதம் வழங்கிய அனுமதிக்கு அங்கீகாரம் வழங்கியிருக்கின்றது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு