செய்தி விவரங்கள்

லண்டன் தாக்குதலின் சூத்திரதாரிகளின் விபரங்கள் வௌயியிடப்பட்டன

பிரித்தானியாவில் லண்டன் பிரிட்ஜ் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் இருவரினது பெயர்களை பிரித்தானிய பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

27 வயதான பாகிஸ்தானைச் சேர்ந்த குராம் மற்றும் 30 வயதான லிபியாவைச் சேர்ந்த ரச்சிட் ரெடோனே ஆகியோரே இந்த தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை இரவு இலண்டனின் மத்திய பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டதுடன் 48 பேர் காயமடைந்தனர்.

இலண்டனின் மத்திய பிரதேசமான லண்டன் பிரிஜ் பகுதியில் வாகனத்தைக் கொண்டு பாதசாரிகளை மோதி தாக்குதல் நடத்திய தாக்குதல்தாரிகள் பின்னர் பரோ மாக்கட் என்ற பகுதிக்குள் நுழைந்து கத்திகளால் சரமாரியாகக் குத்தி தாக்குதல் நடத்தினர்.

இதில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன் 48 பேர் காயமடைந்தனர். இந்தத்  தாக்குதலில் காயமடைந்த 36 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இவர்களில் 18 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப்பெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தாக்குதலை நடத்திய தாக்குதல்தாரிகள் மூவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

சனிக்கிழமை இரவு நடத்தப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்படடவர்களில் பலர் வெளிநாட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொல்லப்பட்டவர்களில் கனேடிய பிரஜையயொருவரும் பிரான்ஸ் நாட்டடைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் அவுஸ்திரேலிய நாட்டவர்கள் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புல் உறுதிப்படுத்தியுள்ளார்.

பிரிஸ்பனைச் சேர்ந்த இருவரும் டார்வினைச் சேர்ந்த ஒருவரும் இதில் அடங்குவதாகவும் இவர்கள் கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்துள்ளதாகவும் அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்தார்.

இதேவேளை பிரான்ஸ் நாட்டவர்கள் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பிரான்ஸ் நாட்டவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை உறுதிப்படுத்திய நடத்தப்பட்டுள்ளதாக பிரித்தானிய பிரதமர் திரேஷா மே, உலகின் சதந்திர நடமாட்டத்தை தடுக்கும் வகையிலேயே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பொலிசார் பல இடங்களில் பாரிய சுற்றிவளைப்புத் தேடுதல்களையும் மேற்கொண்டுள்ளனர்.

இலண்டனின் கிழக்குப் பிரதேசங்களான நிவ்ஹேம் மற்றும் பாக்கிங் பகுதிகளில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதல்களில் 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.

பொலிசாரின் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட வீடுகளில் ஒன்று சனிக்கிழமை தாக்குதல் நடத்திய தாக்குதல்தாரிகள் மூவரில் ஒருவருடையது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை பொலிசாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட தாக்குதல்தாரிகளில் ஒருவர் அயர்லாந்து நாட்டின் அடையாள அட்டையை வைத்திருந்தாகவும் டப்ளின் பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சனிக்கிழமை இலண்டன் தாக்குதலுக்கு ஐ.எஸ் ஆயுததாரிகள் உரிமை கோரியிருந்த நிலையில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம், தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் இருந்து ஏராளமான தடயங்கள் மற்றும் ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளதாக மெற்றோபொலிட்டன் பொலிஸ் ஆணையாளர் கிறஸ்ஸீடா டிக் தெரிவித்தார்.

இந்த நிலையில் தாக்குதல் இடம்பெற்று இரண்டு தினங்களுக்குப் பின்னரும் லண்டன் பிரிஜ் உட்பட அதனை சூழவுள்ள பகுதிகளில் ஏராளமான ஆயுதம் தாங்கிய பொலிசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பன் மடங்கால அதிகரிக்கப்பட்டுள்ளதை காண முடிகின்றது.

தாக்குதல் இடம்பெற்ற பகுதிக்குள் சில பாதைகளும் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளன. தாக்குதல் இடம்பெற்ற பகுதிகளுக்கு செல்லும் மக்கள் மற்றும் அந்தப் பகுதியில் வாழும் மக்களிடையே ஒருவிதமான பதற்றம் காணப்படுகின்ற போதிலும் இலண்டனின் ஏனைய பகுதிகளில் வழமைபோல் காணப்படுகின்றன.

பிரித்தானியாவில் கடந்த மூன்று மாதங்களுக்குள் இடம்பெற்ற மூன்றாவது பயங்கரவாதத் தாக்குதலாக சனிக்கிழமை தாக்குதல் இடம்பிடித்துள்ளது.

பிரித்தானிய வெஸ்டமினிஸ்டர் பாலத்தில் வாகனத்தை கொண்டு மோதியும் கத்தியால் குத்தியும், கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் மெஞ்செஸ்டர் அரீனாவில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர். இதற்கமைய பிரித்தானியாவை இலக்க வைத்துள்ள பயங்கரவாதிகளின் தாக்குதல்களை முன்கூட்டியே அடையாளம் கண்டு அவற்றை தடுப்பது முடியாத விடையமாக மாறியுள்ளது தொடர்பில் கடும் விமர்சனங்களும் கண்டனங்களும் தெரிவிக்கப்பட:டு வருகின்றன.

இஸ்லாமிய கடும்போக்குவாதிகளான ஜியாதிகள் பிரித்தானியா உட்பட ஐரோப்பிய நாடுகளின் அண்மைக்காலமாக நடத்திவரும் மிகவும் கொடூரமான இவ்வாறானத் தாக்குதல்களை தடுப்பது மிகவும் கடினமான செயலாக இருப்பதாக பாதுகாப்புத் துறையினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

எனினும் 2013 ஆம் ஆண்டு முதல் பிரித்தானியாவுக்குள் தாக்குதல்களை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்த  18 சம்பவங்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாகத் பிரித்தானிய பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் வெஸ்ட்மினிஸ்டர் பாலம் மற்றம் இலண்டன் பிரிஜ் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களை ஒத்த தாக்குதல்களை தடுப்பது மிகவும் சிரமமானது என ஏற்றுக்கொண்டுள்ளனர்.

மற்றையவர்களின் உயிரை எறிப்பது மாத்திரமன்றி தமது உயிரையும் பறிகொடுக்கத் தயாரான நிலையில் இவர்கள் இவ்வாறானத் தாக்குதல்களை நடத்த முற்பட்டுள்ளமையே இதற்குப் பிரதான காரணம் என்றும் பாதுகாப்பு தொடர்பான நிபுணர்கள் அறிவித்துள்ளனர்.

இதனாலேயே மெஞ்செஸ்டர் அரீனா தாக்குதல் போன்ற தாக்குதல்களை நடத்தவது தாக்குதல்தாரிகளுக்கு மிகவும் கடினமானதாக இருப்பதாலேயே ஐ.எஸ் ஆயுததாரிகளின் வாகனங்களைக் கொண்டு மோதியும் கத்தியால் குத்தியும் தாக்குதல் நடத்துவதை ஊக்குவித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

இலண்டன் பிரிஜில் சனிக்கிழமை இரவு நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ள இலண்டன் மேயர் சாதிக் கான், இஸ்லாத்தில் எந்தவொரு இடத்திலும் அனுமதியில்லான நச்சு சித்தாந்த்தை பின்பற்றுபவர்களே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை தலைநகரின் பாதுகாப்பை உறுதிப்படுத்திவரும் பொலிசாருக்கான நிதி ஒதுக்கீடுகள் கடந்த ஏழு ஆண்டில் 600 மில்லியன் பவுண்களால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் லண்டன் மேயர் தெரிவித்தார்.

பிரித்தானிய பிரதமர் திரேஷா மே உள்துறை அமைச்சராக இருந்த காலப்பகுதியான 2010 ஆம் ஆண்டு மதல் 2016 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியிலேயே பொலிஸ் திணைக்களத்தின் ஆளனியும் 20 ஆயிரத்தால் குறைக்கப்பட்டது.

இந்த விடையங்கள் காரணமாக எதிர்வரும் வியாழக்கிழமை எட்டாம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலிலும் பிரதமர் திரேஷா மே கடுமையான எதிர்ப்புக்கள் மற்றும் கண்டனங்களுக்கு முகம்கொடுத்துள்ளார். 

இதனால் கன்சவேடிவ் கட்சி பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றாலும் பிரதமர் திரேஷா மே பதவி விலக வேண்டும் என்ற வலியுறுத்தல்களும் தீவிரமடைந்துள்ளன.

இதேவேளை இலண்டன் பிரிஜ் தாக்குதலை அடுத்து பயங்கரவாதத்தை முழுமையாக வேறருப்பதற்காக இஸ்லாமியர்கள் அனைவரும் இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என இலண்டனைச் சேர்ந்த முஸ்லீம் தலைவர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

மெற்றோபொலிட்டன் பொலிசார் சார்பில் கருத்து வெளியிட்ட கமாண்டர் மார்க் கிறிஸ்டி, லண்டன் பிரிஜ் தாக்குதலை அடுத்து முஸ்லீம் சமூகம் மிகவும் எச்சரிக்கையுடனும் அவதானத்துடனும் இருக்க வேண்டிய தருணம் வந்துவிட்டதாகத் தெரிவித்தார்.

இஸ்லாமிய பயங்கரவாதத்தையும் கடும்போக்குவாத்தையும் முற்றாக எதிர்ப்பதாகத் தெரிவித்த முஸ்லீம் சமூகத் தலைவர்கள் லண்டன் பரிஜ் தாக்குதல்கள் போன்ற தாக்குதல்கள் இடம்பெறாது தடுக்க முஸ்லீம் மக்கள் தம்மாலான அனைத்தையும் செய்ய வேண்டம் என்றும் அழைப்பு விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு