செய்தி விவரங்கள்

ட்ரம்பின் தடையுத்தரவை பகுதியளவில் நிறைவேற்றுவதற்கு நீதிமன்றம் அனுமதி

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விதித்த குடியேற்றவாசிகளுக்கு எதிரான தடை உத்தரவை பகுதியளவில் செயற்படுத்துவதற்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ட்ரம்ப், நாட்டைக் காப்பதற்கான விடா முயற்சிக்கு கிடைத்த வெற்றி என தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஆறு இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த அகதிகள் மற்றும் குடியேற்றவாசிகளின் வருகைக்கு எதிராக தடையுத்தரவை வெளியிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து குறித்த தடை உத்தரவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றங்கள் தற்காலிக தடை விதித்து தீர்ப்பளித்திருந்தன.

இந்த நிலையில் ஆறு இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவுக்குள் வர முடியாதவாறு ஜனாதிபதி ட்ரம்பினால் விதிக்கப்பட்ட குறித்த பயணத் தடை உத்தரவை, பகுதியளவில் நடைமுறைப்படுத்த அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

இது தொடர்பில் உரையாற்றிய ட்ரம்ப், “நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டிய முக்கிய பொறுப்பு ஜனாதிபதியிடம் உள்ளதாகவும், அமெரிக்காவுக்கு தீங்கு விளைவிக்க நினைப்பவர்களை தாம் ஒருபோதும் உள்நுழைய அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.ஷ

இதேவேளை குறித்த பயணத் தடையை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதா அல்லது இரத்து செய்வதா என்பது தொடர்பில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் தீர்மானிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ட்ரம்பினால் ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா மற்றும் யேமன் ஆகிய நாடுகளில் உள்ள மக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய முடியாதவாறு சுமார் 90 நாட்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அத்துடன், குறித்த நாடுகளில் இருந்து வரும் அகதிகள் சுமார் 120 நாட்களுக்கு அமெரிக்காவுக்குள் உள்வாங்கப்பட மாட்டார்கள் எனவும் முன்னதாக ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

இந்த பயணத் தடை உத்தரவுக்கு எதிராக பலர் எதிர்ப்பு தெரிவித்தமையை அடுத்து அமெரிக்க நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில் தற்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி சுமார் 72 மணித்தியாலங்களின் பின்னர் குறித்த பயணத்தடை அமுலுக்கு வரும் என ட்ரம்ப் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு