செய்தி விவரங்கள்

பாரிஸ் உடன்படிக்கையிலிருந்து விலகியது அமெரிக்கா - சர்வதேசங்கள் அதிர்ச்சி

காலநிலை மாற்ற கொள்கை தொடர்பான பரிஸ் உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா விலகுவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அத்துடன் வர்த்தக நடவடிக்கை மற்றும் தொழிலாளர்களுக்கும் அனுகூலமான வகையில் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை நோக்கி நகரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ட்ரம்பின் அறிவிப்பிற்கு சர்வதேச நாடுகள் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளன.

இது குறித்து கருத்து தெரிவித்த ஐ.நா. செயலாளர் அன்ரோனியோ குவட்ரஸின் செய்தித் தொடர்பாளர், ட்ரம்பின் அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தை தோற்றுவித்துள்ளதாக தெரிவித்துள்ளார.

அத்துடன் சர்வதேசத்திற்கு கவலையளிக்கக் கூடிய நாள் இது என ஐரோப்பிய ஒன்றியம் தமது கருத்தையும் பதிவு செய்துள்ளது.

சூழல் வெப்பமடைவதன் காரணமாக உலகிற்கு தீங்கு ஏற்படும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் கடந்த 2015ஆம் ஆண்டு காலநிலை மாற்ற உடன்படிக்கை பரிஸில் எட்டப்பட்டது.

இதனடிப்படையில் பாரிய தொழிற்சாலைகளுக்கான காபன் வெளியேற்ற கட்டுப்பாடுகள் தொடர்பில் அமெரிக்கா, சீனா, பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகள் இணக்கம் கண்டிருந்தன.

எனினும் காலநிலை மாற்றம் குறித்த விடயத்தில் அதிருப்தி வெளியிட்ட டொனால்ட் ட்ரம்ப், இதனை இரத்து செய்து அமெரிக்காவின் எண்ணெய் மற்றும் நிலக்கரி தொழிற்சாலைகளுக்கு வாய்ப்பு வழங்கவிருப்பதாக ஜனாதிபதி தேர்தல் பிரச்சார காலத்தில் அறிவித்திருந்தார்.

ட்ரம்பின் இந்த அறிவிப்பு அமெரிக்காவின் எண்ணெய் மற்றும் நிலக்கரி துறைக்கு ஆதரவாக அமையும் என அமெரிக்க குடியரசு கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ள நிலையில் பரிஸ் உடன்படிக்கையானது அமெரிக்காவில் மில்லியன் கணக்கான வேலையிழப்புக்களுக்கு வழிவகுக்கும் என்றும் அது அமெரிக்காவுக்கான தண்டனையாக அமையும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையிலேயே, காலநிலை மாற்றம் குறித்த உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா விலகுவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு