செய்தி விவரங்கள்

சர்வதேசத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் வடகொரியாவின் ஏவுகணை திட்டங்கள்

வடகொரியாவின் ஏவுகணைத் திட்டங்கள் வெற்றியடையும் பட்சத்தில் அது சர்வதேசத்திற்கு பாரிய அச்சுறுத்தலாக விளங்கும் என அமெரிக்க இராஜாங்க துணைச் செயலாளர் தோமஸ் ஷெனன் தெரிவித்துள்ளார்.

ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், இன்று டோக்கியோவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ  விஜயத்தை முன்னெடுத்துள்ள தோமஸ், இன்று தலைநகர் டோக்கியோவில் ஜப்பான் தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், வடகொரியாவின் ஏவுகணை மற்றும் கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டங்கள் காலப்போக்கில் மேலும் வெற்றிகரமாக நடைபெறும்  பட்சத்தில் அது சர்வதேசங்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.

வடகொரியாவின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் சீனா மற்றும் ஐ.நாவின் முக்கியத்துவம் குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.

வடகொரியா, ஐ.நா மற்றும் சர்வதேசங்களின் எதிர்ப்புக்களையும் மீறி அணுவாயுத பரிசோதனைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது.

இதனால் கொரிய தீபகற்பங்களில் பதற்ற நிலை நிலவிவருகிற நிலையில் வடகொரியா மீது கடுமையான தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.  

இந்த நிலையில் வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன், அமெரிக்காவின் முக்கிய பகுதிகளை தாக்கும் வகையிலான கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தயரிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு