செய்தி விவரங்கள்

லண்டனில் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் பலியானவர்களின் என்னிக்கை உயர்வு..

பிரிட்டன் தலைநகர் லண்டனில் 24 தளங்களைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்தது. இந்தத் தீவிபத்தில் தீ மிக வேகமாகப் பரவியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்த அந்த நாட்டுப் பிரதமர் தெரசா மே உத்தரவிட்டுள்ளார்.

மேற்கு லண்டன் பகுதியில் உள்ள கிரீன்ஃபெல் என்ற இந்த அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தம் 120 வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பின் 2-ஆவது மாடியில் பிரிட்டன் நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு 1.16 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. தீப்பிடித்தபோது அந்தக் குடியிருப்பில் 600-க்கும் மேற்பட்டோர் இருந்ததாக நம்பப்படுகிறது. எதிர்பாராத வகையில் அந்தத் தீ மிக வேகமாக அடுத்தடுத்த தளங்களுக்கும்ப்பரவியது. தகவலறிந்ததுதும் அந்தப் பகுதிக்கு விரைந்த தீயணைப்புப் படையினர் பல மணி நேரங்கள் போராடி தீயை அணைத்தனர். மேலும், தீவிபத்தில் சிக்கியர்வகளையும் மீட்டனர்.

எனினும், கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த தீயால் அதிக வெப்பம் காரணமாக மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறினர். இந்த நிலையில், தீக்கிரையான கட்டடத்தில் இனியும் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் வியாழக்கிழமை அறிவித்தனர். அந்தப் பகுதியிலிருந்து இதுவரை 17 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மோசமாக சேதமடைந்திருக்கும் அந்தக் கட்டத்தில் மேலும் பல உடல்கள் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அந்தக் கட்டடத்தில் வசித்த ஏராளமானோர் மாயமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் காயமடைந்த 78 பேரில், 34 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 18 பேரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதன்கிழமை இரவு முழுவதும் போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள், தளம், தளமாகச் சென்று உடல்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கட்டடத்தில் சில பகுதிகளில் அவ்வப்போது தீப் பிடித்து எரிவதால் உடல்களை மீட்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர். தீவிபத்துக்குள்ளான கட்டடத்தின் பாதுகாப்பு குறித்து ஏற்கெனவே கவலை தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், அந்தக் கட்டடத்தை நிர்வகிப்பவர்களின் அலட்சியத்தால்தான் இந்த விபத்தால் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

மேலும், கட்டடத்தின் புனரமைப்புப் பணிகள் கடந்த ஆண்டு நிறைவடைந்ததாகவும், அப்போது சுவர்களை பலப்படுத்துவதற்காகவும், வெப்பத்திலிருந்து தடுப்பதற்காகவும் பொருத்தப்பட்ட கூடுதல் பொருள்களால்தான் தீ கட்டுக்கடங்காத வேகத்தில் பரவியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, இதுகுறித்து விசாரணை நடத்த பிரதமர் தெரசா மே உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு