செய்தி விவரங்கள்

லண்டன் அடுக்குமாடி தீ விபத்து - பலி எண்ணிக்கை 58 ஆக அதிகரிப்பு

லண்டன் அடுக்குமாடி தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது.

காணாமல்போன 28 பேர் உயிரிழந்துவிட்டதாக நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது.

பிரித்தானியத் தலைநகர் இலண்டனின் மேற்குப் பகுதியான கெ்ஷிங்டன் வடக்கிலுள்ள கிறீன்பெல் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இன்னமும் 56 பேர் தொடர்பில் எந்த விபரங்களும் தெரியாமல் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படும் அனைவரும்  உயிரிழந்திருக்கலாம் என குறிப்பிடும் பொலிசார் ஏற்கனவே இந்த விபத்தில் 30 பலியாகியள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

இலண்டனின் மேற்குப் பகுதியிலுள்ள கிறீன்பெல் டவர் அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதியில் கடந்த புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற தீ விபத்தை அடுத்து குறித்த கட்டடம் முற்றாக தீக்கிரையாகியுள்ளது.

தொடர்ந்தும் மீட்புப் பணிகளும் தேடுதல் பணிகளும் இடம்பெற்று வரும் நிலையில் இன்னும் சில வாரங்களுக்கு இந்தப் பணிகள் தொடரும் என மெற்றோ பொலிட்டன் பொலிஸ் கட்டளை அதிகாரி ஸ்டுவட் கன்டி தெரிவித்துள்ளார்.

தீ விபத்து இடம்பெற்றபோது கட்டடத்திற்குள் சிக்கியதாக கூறப்படுபவர்கள் இருந்த இடங்களை கூடிய விரைவில் கண்டுபிடித்துவிடுவோம் என்றும் காவல்துறை அதிகாரி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இன்னமும் 56 பேர் தொடர்பில் விபரங்கள் தெரியாதுள்ளதாக காவல்துறையினர் கூறுகின்ற போதிலும் இந்த எண்ணிக்கை 70 ஆகி இருப்பதாக பீ.பீ.சீ தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

நேற்றுமுன்தினம் தீக்கிரையாகிய கட்டடத்திற்குள் இடம்பெற்றுவரும் தேடுதல் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

பாதுகாப்பு சிக்கல்கள் எழுந்ததை அடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேடுதல் பணிகள் நேற்று காலை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கிறீன்பெல் டவர் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட மோசமான தீ விபத்து மற்றும் மெஞ்செஸ்டர் இலண்டன் தாக்குதல்கள் காரணமாக நாடு மிகவும் சோகமான மனநிலையில் இருப்பதாக பிறந்த தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் பிரித்தானிய மகாராணியார் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இந்த நிலையிலிருந்து நாடு துரிதமாக மீள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தீ விபத்து சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளால் ஆத்திரமடைந்துள்ள மக்கள் கெ்னஷிங்டன் வடக்குப் பகுதியில் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

வீடுகள் உட்பட அனைத்து உடமைகளையும் நூறுக்கும் மேற்பட்ட உறவுகளையும் இழந்து நிற்கும் மக்கள் தமக்கு
நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

2016 ஆம் ஆண்டே கிறீன்பெல் டவர் அடுக்குமாடிக் குடியிருப்பு புனருத்தாபனம் செய்து முடிக்கப்பட்டிருந்தது.

எனினும் தீ விபத்து இடம்பெற்ற போது தீ அபாய ஒலி எழுப்பப்படவில்லை என உயிர்தப்பிய மக்கள் தெரிவித்து வரும் நிலையில் இந்த தீ விபத்துக்கான காரணத்தை கண்டுபிடிக்குமாறு வலியுறுத்துகின்றனர்.

இதேவேளை தீ விபத்தில் உயிரிழந்த மற்றும் காணாமல் போயுள்ளவர்களுக்காக மெழுகுவர்த்திகளை ஏந்தி மக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்த நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு