செய்தி விவரங்கள்

லண்டனில் 24 அடுக்குகளை கொண்ட குடியிருப்பில் தீ விபத்து..

லண்டன் நகரில் 24 அடுக்குகளை கொண்ட குடியிருப்பில் நேற்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த குடியிருப்பில் இருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு அங்கும் இங்கும் ஓடினர். மேலும் ஜன்னல் வழியாகவும் பலர் சாலையில் செல்வோரை உதவிக்கு அழைத்தனர். எனினும் அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. இந்த விபத்தில் 12 பேர் வரை இறந்துள்ளதாக மீட்பு பணியினர் தெரிவித்தனர்.

மேலும் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மொத்தமுள்ள 24 மாடிகளில் 21 மாடிக்கு மேல் உள்ள 21, 22, 23 ஆகிய மாடிகளில் உள்ளவர்களின் நிலை என்ன என்று தெரியவில்லை. இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் விபத்தை நேரில் பார்த்த சமீரா லம்ப்ரானி கூறுகையில், தீவிபத்து ஏற்பட்டதும் அந்த கட்டடத்தின் ஜன்னல்களில் இருந்து குழந்தைகள், மக்கள் என உதவிக்கு அழைத்தனர். 9-ஆவது மாடியில் ஜன்னல் ஒன்று பாதி திறந்த நிலையில் இருந்ததை கண்டேன். அப்போது ஒரு பெண், தனது குழந்தையை வீசுகிறேன். யாராவது பிடித்துக் கொள்ளுங்கள் என்று கூறியபடியே குழந்தையை வீசினார். இதனால் குழந்தைக்கு என்னாவாகுமோ என்று பயம் அடைந்தேன். எனினும் அங்கிருந்த ஒருவர் குழந்தையை பத்திரமாக பிடித்து கொண்டார்.

இதனால் குழந்தை உயிர்தப்பியது என்றார். இந்த விபத்தை நேரில் பார்த்த மற்றொரு பெண் கூறுகையில் ஒரு பெண் 5 அல்லது 6-ஆவது மாடியிலிருந்து தனது 5 வயது மகனை கீழே வீசினார். அந்த குழந்தைக்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டிருக்கும் என நினைக்கிறேன் என்றார். குடியிருப்பில் இருந்த சிலர் தங்களிடம் உள்ள பெரிய துணிகளை பாராசூட் போல் செய்து அதன் மூலம் ஜன்னல்களில் இருந்து குதித்தனர். ஆனால் அனைவரும் தப்பினரா என்பது தெரியவில்லை. 21-ஆவது மாடியில் இருந்து ஒரு பெண் தனது 6 குழந்தைகளுடன் இறங்கினார். ஆனால் அவர் கீழே வரும் போது 4 குழந்தைகள் மட்டுமே இருந்தனர். இதனால் மீதமுள்ள 2 குழந்தைகளின் நிலை என்ன ஆனது என தெரியவில்லை என்றும் மற்றொருவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு