செய்தி விவரங்கள்

பிரெக்சிட் பேச்சுக்கள் குறிப்பிட்ட திகதியில் ஆரம்பிக்கப்பட வேண்டும்

பிரித்தானியாவில் நடைபெற்றுமுடிந்த பொதுத் தேர்தல் முடிவுகள் ஆளும் கன்சவேடிவ் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தனித்து ஆட்சி அமைத்திருந்த கன்சவேடிவ் கட்சி, பெரும்பான்மைப் பலத்தை இழந்துள்ள நிலையில் மீண்டும் ஆட்சி பீடம் ஏறுவதற்கு மற்றுமொரு கட்சியின் ஆதரவை நாடியுள்ளது.

இந்தநிலையில் பிரித்தானிய தேர்தல் முடிவுகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மாத்திரமன்றி அதனையும் தாண்டி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எனினும் எந்தவொரு தாமதமும் இன்றி பிரெக்சிட் பேச்சுக்களை குறிப்பிட்ட திகதியில் ஆரம்பிக்க வேண்டும் என ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் ஜீன் கிளவுட் ஜங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரித்தானியாவில் நேற்றைய தினம் நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் பிரதமர் திரேஷா மே தலைமையிலான கன்சவேடிவ் கட்சி 318 ஆசனங்களையும் ஜெரமி கோபின் தலைமையிலான தொழிற்கட்சி 261 ஆசனங்களையும், எஸ்.என்.பி 35 ஆசனங்களையும் லிபரல் ஜனநாயகக் கட்சி 12 ஆசனங்களையும் அயர்லாந்தின் ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சி 10 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.

இதற்கமைய பிரதமர் திரேஷா மே தலைமையிலான கன்சவேடிவ் கட்சி தனித்து ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை இழந்துள்ளது.

இது அவர் மீது மக்கள் கொண்டிருந்த ஆத்திரத்தையே  வெளிப்படுத்தி இருப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது.
தேர்தல் முடிவுகள் தொடர்பில் இன்னமும் அமெரிக்க அதிபர் டிரம்ப் எந்தக் கருத்தையும் வெளியிடாத போதிலும் வொஷிங்டன் போஸ்ட் பிரித்தானியாவில் எதிர்பார்க்காத தேர்தல் முடிவுகள் வெளிவந்திருப்பதாகக் கூறியுள்ளது.

அதேவேளை இரண்டாவது தடவையாகவும் பிரித்தானியாவின் முன்னணி ஊடகங்களின் கருத்துக் கணிப்புக்களை மக்கள் பொய்யாக்கியிருக்கும் தேர்தலாகவும் இம்முறைத் தேர்தல் முடிவுகள் அமைந்திருப்பதாகவும் வொஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

எனினும் இம்முறை தேர்தல் முடிவுகள் பிரெக்சிட் பேச்சுக்களில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சீன ஊடகங்கள் முன்கூட்டியே அறிவித்ததிருந்தது போல் தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கின்றன.

ஹொங்கொங்கை தளமாகக் கொண்ட சுயாதீன ஊடக நிறுவனம் வெளியிட்டிருந்த அறிக்கையொன்றில் கன்சவேடிவ் கட்சி தவறான முடிவை எடுத்திருப்பதாக தேர்தலுக்கு முன்னரே கூறியிருந்தது.

அதேவேளை பீஜிங்கிலுள்ள ஷிங்குவா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஷீ ஷீகியூங்கும் இதே கருத்தை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் நடந்துமுடிந்த தேர்தல் தொழிற் கட்சியின் தலைவர் ஜெரமி கோபினின் அரசியலுக்கு பெரும் பலத்தைச் சேர்த்துள்ளது.

2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலுடன் ஒப்பிடும் போது தொழிற் கட்சி மேலதிகமாக இம்முறை 29 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

இது குறித்து ஜெரமி கோபினின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளதுடன் கொண்டாடி வருகின்றனர்.
ஜெரமி கோபினுக்கு கிடைத்துள்ள இந்த வெற்றி குறித்து  அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் ஈடுபட்டிருந்த செனட்டர் பேர்னி சென்டரஸ் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

வருமான ஏற்றத் தாழ்வுக்கும் பொதுநலன்புரி சேவைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைப்பதற்கும் உலகம் முழுவதும் பரந்து வாழும் மக்கள் கிளர்ந்தெழுவதையே பிரித்தானிய தேர்தல் முடிவுகளும் வெளிப்படுத்தியுள்ளதாக பேர்னி சென்டரஸ் தெரிவித்துள்ளார்.

இதே கருத்தையே அவுஸ்திரேலியாவின் எதிர்கட்சித் தலைவர் பில் சோர்ட்டன் தெரிவித்திருக்கின்றார்.
பலருக்காகவே இது சிலருக்கு அல்ல என்ற பிரித்தானிய தொழிற் கட்சியின் தலைவர் ஜெரமி கோபினின் தேர்தல் பிரசாரம் மக்கள் மத்தியில் சென்றடைந்துள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் அதிர்ச்சி வெளியிட்டுவரும் நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது குறித்த செயற்திட்டத்தை திட்டமிட்டபடி ஆரம்பிக்க வேண்டும் என ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் ஜீன் கிளவுட் ஜங்கர் வலியுறுத்தியுள்ளார்.

எந்தவிதத் தாமதமும் இன்றி பிரெக்சிட் சமரசப் பேச்சுக்கள் திட்டமிட்டபடி நாளைய தினம் காலை 9.30 க்க ஆரம்பிக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதன்போது முதலில் விவகாரத்துக்கான செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வழிகள் தொடர்பில் இணக்கம்  காணப்படும் என்றும் ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

எனினும் பிரெக்சிட் பேச்சுக்களுக்கு முதலில் பிரித்தானியாவில் அரசாங்கமொன்று ஆட்சிபீடம் ஏற வேண்டும் என பிரித்தானியாவின் பிரெக்சிட் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பிரெக்சிட் அமைச்சர் மைக்கல் பானியர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா தயாராகும் போதே பிரெக்சிட் பேச்சுக்கள் ஆரம்பிக்கும் என்றும் அவர் மிகத் தெளிவாக அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு