செய்தி விவரங்கள்

அதிர்ச்சித் தோல்வியைச் சந்திக்கும் இந்திய அணி

துடுப்பாட்டத்தில் அசத்தி நான்கு விக்கெட் இழப்பிற்கு 338ஓட்டங்கள் எடுத்த பாகிஸ்தான் அணி , தன் பந்து வீச்சிலும் அபார திறமையைக் காட்டி , இந்திய அணியை மண் கவ்வ வைத்துள்ளது .

தனது கடைசி இரண்டு ஆட்டங்களிலும் அரைச் சதங்கள் எடுத்திருந்த பாகிஸ்தானிய தொடக்க ஆட்டக்காரர் ஸமான், இந்த மோதலில் சதம் அடித்து தன் அணியை வெற்றிப் பாதையில் இட்டுச் சென்றுள்ளார் . அது மட்டுமல்ல . இந்த ஒருநாள் போட்டித் தொடரின் இறுதி மோதலில் முதற் சதம் எடுத்த பாகிஸ்தானிய  துடுப்பாட்ட வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார் .இது இவர் பங்கு பற்றும் நான்காவது போட்டி என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

 இந்திய அணி ஒரு கட்டத்தில் 5 விக்கெட்டுகளை இழந்து 54ஓட்டங்களை மாத்திரமே எடுத்த நிலையில், இந்தியா கிண்ணத்தை கைநழுவ விட்டுவிட்டது என்ற நிலை உருவாகி விட்டது .இந்தியாவின் பன்முக ஆட்டக்காரரான கார்த்திக் பாண்டியாவின் வரவு இந்திய அணிக்கு சற்று தெம்பைக் கொடுத்தது . ஆறு சிக்ஸ்சர்களுடன் 43பந்துகளில் 76 ஓட்டங்கள் எடுத்து அவர் நடாத்திய வான வேடிக்கை , ஜடேஜாவின் அசட்டுத்தனத்தால் , இந்திய அணிக்கு உதவ முடியாமல் போயிற்று.

31  ஓவர்கள் முடிந்தபோது இந்தியாவின் கதையும் முடிக்கப்பட்டு இருந்தது .  158 ஓட்டங்களுடன் இந்திய அணியை சுருள வைத்தது பாகிஸ்தான் ,

 இதுவரை நடந்த ஒருநாள் போட்டிகளில் மிக அதிக ஓட்டங்களால் –அதாவது 180ஓட்டங்களால் எதிரணியை இறுதி மோதலில் வென்ற சாதனை பாகிஸ்தான் அணியினரால் படைக்கப்பட்டுள்ளது . 2003 இல் அவுஸ்த்ரேலிய அணியினர்  இந்தியாவை  125 ஓட்ட வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்தார்கள்.

 “தங்கப் பந்து “ விருதை  13விக்கெட்டுகளை வீழ்த்திய பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் ஹசன் அலி பெற்றுள்ளார் . இவரே ஆட்ட நாயகனாகவும் தெரிவாகி உள்ளார் . “தங்க துடுப்பாட்ட மட்டை” விருதை 338ஓட்டங்களை இத் தொடரில்  எடுத்த இந்திய அணி வீரர் ஷிக்கார் தவான் தனதாக்கி உள்ளார் .

 வழமையாக எதிரணியினரை துவம்சம் செய்யும் சுழல் பந்து வீச்சாளர்கள் அஸ்வினும் ஜடேஜாவும் தங்கள் பந்து வீச்சு எந்த மாயமும் செய்யாமல் அடித்து நொறுக்கப்பட்டமை , அவர்களை நிலைகுலைய வைத்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது

 

 

 

 

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு