செய்தி விவரங்கள்

'நீட் தேர்வு விவகாரம்'- குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணித்திடுக- கி.வீரமணி.!

பாஜக அரசினால் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக நீட் நுழைவுத் தேர்வு சில மாதங்களுக்கு முன்பு  நடத்தப்பட்டது. தேர்வெழுத சென்ற மாணவிகளின் உள்ளாடைகளைச் சோதனையிட்டது முதல், மாநில வாரியாக வெவ்வேறு கேள்வி தாள்களை வழங்கியது உள்ளிட்ட பல சர்ச்சைகள் நீட் தேர்வு குறித்து எழுந்த வண்ணம் இருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

இந்த தேர்வு முடிவுகளில் மிகக் குறைந்த அளவிலேயே தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மருத்துவம் படிக்க வேண்டுமென்ற கனவு பறிபோகும் நிலையிலுள்ளனர் பல மாணவர்கள்.

இந்நிலையில், நீட் விவகாரம் குறித்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார். திராவிட கழக தலைவர் வீரமணி. அதில் குறிப்பிட்டுள்ளதாவது "மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வு முடிவுகள் வெளி வந்துள்ளன. தமிழ்நாட்டின் மீது பேரிடியாக விழுந்துள்ளது. நாம் எச்சரித்தபடியே முடிவுகள் அமைந் துள்ளன. தமிழ்நாட்டு மாணவர்களுக்கு 38 விழுக்காடு இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

பல்வேறு கல்வித் திட்டங்கள் இருக்கும் பொழுது சி.பி.எஸ்.இ. முறையில் தேர்வு நடத்தினால் சிபிஎஸ்இ கல்வித் திட்டத்தில் படித்தவர்களுக்கே சாதகமாக இருக்கும். மாநிலக் கல்வித் திட்டத்தின்கீழ் படித்தவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். கிராமப் புற மக்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று எச்சரித்தோம். நாம் எச்சரித்தபடியே முடிவுகள் வெளி வந்துள்ளன.

5 சதவீத சிபிஎஸ்இ மாணவர்களின் சாதகத்துக்காக, நலனுக்காக 95 சதவீத மற்ற மாநில கல்வி வழிபடிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுவது நியாயம்தானா? சமூக அநீதி அல்லவா!

நீட் தேர்வில் தமிழ்நாட்டுக்கு விதி விலக்கு அளிக்கக் கோரும் சட்டத்தை தமிழ்நாடு சட்டமன்றம் ஒரு மனதாக நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியும் அதனைக் குடியரசுத் தலைவருக்கே அனுப்பாத மத்திய அரசின்மீது ஒரு கண்டன வார்த்தை உண்டா? போதுமான அழுத்தம் தான் கொடுக்கப்பட்டதா? மயிலிற கால் தானே வருடியது தமிழ்நாடு அரசு.

இப்பொழுதுகூட ஒன்றும் கெட்டுப் போய் விடவில்லை. தமிழ்நாடு அரசின் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காவிட்டால் குடியரசுத் தலை வர் தேர்தலை அதிமுக அரசு புறக்கணிக்கும் என்று சொல்லட்டுமே! தமிழ்நாட்டு மக்கள் மீது உண்மையான அக்கறை - தமிழ் மண்ணுக்கே உரித்தான சமூக நீதியின் மீது மதிப்பு இருந்தால் அதனை உடனடியாகச் செய்ய வேண்டும் - அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்." என குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு