செய்தி விவரங்கள்

சிங்கள இனத்திற்காக பாடுபட்ட வீரசிங்கவை விடுவிக்கும்படி விண்ணப்பம்

சிங்கள இனத்திற்காக பாடுபட்ட வீரசிங்கவை விடுவிக்கும்படி விண்ணப்பம் 

கண்டி இனவாத நடவடிக்கையின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் மஹசொஹன் பலகாயவின் தலைவர் அமித் வீரசிங்கவின் மனைவி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார்.

தனது கணவர் இனவாதத்தை தூண்டுமாறு எந்தவொரு பகிரங்க அறிவிப்பையும் செய்யவில்லை என்று தெரிவித்த அவர், கடைகள், பள்ளிவாசல் என்பவற்றை தீ வைக்குமாறு தனது கணவர் அறிவிக்கவும் இல்லை என்றும், பொலிஸாரே தனது கணவரை வருமாறு அழைப்பு விடுத்தனர் என்றும் கூறியுள்ளார்.

கண்டி திகன, தெல்தெனிய உள்ளிட்ட பகுதிகளில் கடந்த வாரம் இடம்பெற்ற வன்முறைகளையடுத்து 140க்கும் அதிகமான சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்தனர்.

பிரதான சந்தேக நபராக கடும்போக்கு பேரினவாதக் குழுவாக கருதப்படும் மஹசொஹன் படையணியின் தலைவர் அமித் வீரசிங்கவும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைத்துவரப்பட்டார்.

எனினும் தனது கணவர் மீது எந்தவித குற்றச்சாட்டுக்களும் இல்லை என்று தெரிவித்து அவர் மீது குற்றம் சுமத்திய தரப்பினர் மீதும் தனது கணவருக்கு ஏற்பட்டுள்ள உரிமை மீறல் பற்றியும் விசாரணை நடத்தும்படி கொழும்பிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அமித் வீரசிங்கவின் மனைவி முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்தார்.

இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், பொலிஸார் உட்பட அனைவரும் சம்பவத்திற்கு காரணமானவர் என்ற போதிலும் தனது கணவரை மட்டுமே அதற்கு காரணவாதியாக மாற்றிவிட்டதாக குற்றம் சுமத்தினார்.

“மஹசொஹன் படையின் அமீத் வீரசிங்க ஆகிய எனது கணவரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர். யாரையும் பாதிக்கக்கூடிய அல்லது பாதிக்கும் அவர் எந்தவொரு விடயத்தையும் இதுவரை கூறவோ செய்யவோ இல்லை. எனக்கு மிகவும் நன்கு தெரியும், முஸ்லிம் வர்த்தக நிலையங்கள், பள்ளிகளை உடைப்பது தொடர்பில் எந்தவொரு துண்டுப் பிரசுரத்தையும் அவர் விநியோகிக்கவும் இல்லை.

சிங்கள இனத்தை கட்டியெழுப்ப அவர் மிகவும் சேவைகளை செய்திருக்கிறார். நீதியை கேட்டு நான் இங்கு வந்திருக்கிறேன். அதேபோல மஹசொஹன் படையானது எந்தவொரு அரசியல் கைக்கூலியாக செயற்படும் அமைப்பல்ல. இந்தக் குற்றச்சாட்டை நிரூபித்தால் அமைப்பை கலைத்துவிடுவதாகவும் சொன்னார்கள். எனவே மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் நான் முறையிட்டுள்ளேன். எமது அமைப்பின் அலுவலகத்திலிருந்த பெயர்ப்பலகை மற்றும் சி.சி.ரி.வி என்பன அகற்றப்பட்டுள்ளன.

இவற்றை யாரோ எடுத்துச் சென்றுள்ளனர். பொலிஸ் நிலையத்தில் இதனை முறையிட்ட போதிலும் அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளவும் இல்லை. தெல்தெனிய கலவரத்தின்போது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியே எனது கணவரை இதனுடன் சம்பந்தப்படுத்தியதாக நான் அறிகிறேன். பொலிஸாரே இவரை தள்ளிவிட்டு தங்களை காப்பாற்றிக்கொண்டுள்ளனர்” என்றார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு