செய்தி விவரங்கள்

ஸ்ரீலங்காவில் அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யார்?

ஸ்ரீலங்காவில் அடுத்து யார் ஆட்சி அமைக்கப்போகின்றார்கள் என்ற கேள்விக்கு விரைவில் முடிவு கிடைக்கும் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சி இணங்கினால் தேசிய அரசாங்கத்தை தொடர்வது என்று தெரிவிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி அவர்கள் இணங்காவிட்டால் தனித்து ஆட்சி அமைக்கப் போவதாக திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்காவில் அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யார்?

ஸ்ரீலங்காவில் நடந்துமுடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஈட்டிய எதிர்பாராத வெற்றியை அடுத்து ஸ்ரீலங்காவின் ஆட்சி தொடர்பிலும் கேள்விகள் எழுந்தன.

உள்ளுராட்சி சபைத் தேர்தலை அடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு அந்தப் பதவியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு வழங்குமாறு மஹிந்தவின் கூட்டு எதிரணியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதேவேளை தேசிய அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களும் இதே கருத்தை வலியுறுத்தி ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு தொடர்ச்சியாக அழுத்தம்கொடுத்து வருகின்றனர்.

பிரதமர் பதவியிலிருந்து ரணில் விலகினால் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லலாம் என்று தெரிவித்திருக்கும் சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் ரணில் பிரதமர் பதவியை விட்டுக்கொடுக்க மறத்தால் எதிர்கட்சியில் அமரப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் அடுத்து என்ன செய்வது என்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையும் கட்சியின் அனைத்து மட்டத்தினருடனும் ஆராய்ந்து வருகின்றது.

இதற்கமைய நேற்று முன்தினம் முதல் இன்று நண்பகல் வரை தொடர்ந்த கலந்துரையாடல்களின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை முன்னெடுப்பதற்கு கட்சியின் தலைமைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் அதற்கு இணங்காவிட்டால் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு, அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் என அனைத்து மட்டத்தினரும் கட்சியின் தலைவருக்கு இதற்கான அனுமதியை வழங்கியிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரான அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தவொரு கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துடன் இணைந்துகொள்ள முடியும் என்றும் அமைச்சர் சமரவிக்கிரம குறிப்பிட்டுள்ளார்.

நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் உள்ளுராட்சி சபைகளுக்கான மக்களின் ஆணையாகவே அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிய மலிக் சமரவிக்கிரம எனினும் அதனை அடிப்படையாகக் கொண்டு தேசிய அரசாங்கத்தை மாற்றுமாறு கோரிக்கை விடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

எனினும் மக்கள் தற்போதைய அரசாங்கத்தில் குறைபாடுகள் இருப்பதாக வெளிப்படையாக சுட்டிக்காட்டியிருப்பதால் அவற்றை நிவர்த்தி செய்வதற்கான சந்தர்ப்பமாக தேர்தல் முடிவுகளை பயன்படுத்திக் கொள்ளப் போவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கூறியுள்ளார்.

2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது ஐக்கிய தேசிய முன்னணிக்கு மக்கள் ஐந்து வருடங்களுக்கான  ஆணையை வழங்கியிருந்ததாகக் கூறும் மலிக் அதற்கமைய ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆட்சியில் இருப்பதற்கு இன்னும் மூன்று வருடங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

டந்த மூன்று ஆண்டுகளில் கடன் சுமையிலிருந்து நாட்டை மீட்பதற்காக பல நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த நிலையில் அடுத்துவரும் நாட்களில் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பிக்கொண்டு மக்களுக்கான சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி சபைத் தேர்தல் ஒரு சர்வஜன வாக்கெடுப்பாகவே தாம் கருதுவதாக தேர்தலுக்கு முன்னர் மஹிந்தவும் - ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் கூறியிருந்ததை நினைவுகூர்ந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் எனினும் மஹிந்தவிற்கு 44 வீதமான வாக்குகளே கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி உட்பட ஏனைய கட்சிகளுக்கு மக்கள் 55 வீதமான வாக்குகளை அளித்திருப்பதாகவும் அமைச்சர் மலிக் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விலக வேண்டும் என்று கட்சிக்குள் அழுத்தங்கள் தீவிரமடைந்து வருவதாக கொழும்பிலுள்ள ஊடகங்கள் வெளியிட்டுவரும் தகவல்களிலும் உண்மை இல்லை என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து மட்டத்தினருடனான சந்திப்புக்களின் போதும் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் மலிக் சமரவிக்கிரம மேலும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு