செய்தி விவரங்கள்

பொதுக்கொள்கையை உருவாக்கி செயற்படுமாறு தமிழ் கட்சிகளுக்கு ஆலோசணை

பொதுக்கொள்கையை உருவாக்கி செயற்படுமாறு தமிழ் கட்சிகளுக்கு ஆலோசணை

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவடைந்த நிலையில் வடக்கு கிழக்கில் தமிழ் கட்சிகள், தனித்து இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் அவ்வாறு ஒன்றிணைவதற்கு முன்னர் பொதுக் கொள்கை ஒன்றை வகுத்து பொதுச் சின்னம் ஒன்றில் அரசியல் கட்சியாக பதிவு செய்து செயற்படுவது ஆரோக்கியமானதென ஆலோனைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை உள்ளடக்கிய பொதுக்கொள்கை ஒன்றை வரைவது தொடர்பாக அரசியல் கல்வியாளர் குழு ஒன்று நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக தமிழர்களின் இறைமை சுயமாக செயற்படக்கூடிய முறையிலும், தமிழர்களின் சுயமரியாதையை பேணக்கூடிய வகையிலும் பொதுக்கொள்கை வகுக்கப்பட வேண்டும்.

அத்துடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களை நீண்டதூர நோக்கில் பிரதிநிதித்துவம் செய்யக் கூடிய தலைமை அல்லது இணைத் தலைமை அந்த பொதுக்கொள்கையில் அமைய வேண்டும் என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த அடிப்படையில் தமிழரசுக் கட்சி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் பேரவை, சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல்எப், தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ரெலோ, ஈபிடிபி மற்றும் சுயமாக செயற்பட்டு வரும் தமிழ் அரசியல் ஆர்வலர்கள் ஆகியோர் ஒன்றுகூடி கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக கூறப்படுகின்றது.

வடக்கு, கிழக்கில் 38 உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றியுள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு 36 சபைகளில் தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலைமை காணப்படுகின்றது. ஏனைய கட்சிகளுக்கும் அவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகவே அதிக ஆசனங்களைப் பெற்றுள்ள ஏனைய கட்சிகள் வெறுமனே ஆதரவை வழங்காமல் மேற்படி பொதுக்கொள்கை ஒன்றை வகுத்து பொதுச் சின்னத்தின் கீழ் கட்சியாக பதிவு செய்து இயங்குவது அவசியமாகும்.

அதன் மூலம் எதிர்கால அரசியல் விடயங்களில் தமிழ் மக்கள் நலன்சார்ந்து இயங்க அது இலகுவாக அமையும் எனவும் கடந்தகால அனுபவங்களின் அடிப்படையில் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மைத்திரி - ரணில் அரசாங்கமாக இருந்தாலும், மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சி அமைத்தாலும் தமிழ் மக்கள் நலன்சார்ந்த அந்தப் பொதுக்கொள்கையின் அடிப்படையில் அனைத்து தமிழ் கட்சிகளும் செயற்பட்டால் இலங்கை அரசு என்ற கட்டமைப்பில் மாற்றங்களை கொண்டு வரமுடியும் எனவும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த விடயங்கள் குறித்து அரசியல் பத்தி எழுத்தாளர்கள் சிலர், அரசியல் கட்சிகளுடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளதாகவும் மற்றுமொரு தகவல் கூறுவதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு