செய்தி விவரங்கள்

நதிநீர் இணைப்பு விவகாரம்; பிரதமருக்கு மு.க ஸ்டாலின் முக்கிய கடிதம்.!

நதிநீர் இணைப்பு விவகாரம் குறித்து, பிரதமர் மோடிக்கு திமுகவின் செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் "மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் இணைப்பு பிரச்சினைகளால் தமிழகம் இன்றைக்கு மிக மோசமான சூழலை அனுபவித்து வருகிறது என்பதையும், தமிழக விவசாயிகள் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் சொல்லொனாத் துயரினை ஒவ்வொரு நாளும்சந்தித்து வருகின்றனர் என்பதையும் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அண்டை மாநிலங்களில் இருந்து உரிய நீரினை பெறுவதற்கு போராட்டம், பொய்த்து விட்ட பருவ மழை மற்றும் மோசமான வறட்சி போன்றவை விவசாயிகளின் அன்றாட வாழ்க்கையையும், அவர்களது வாழ்வாதாரத்தினையும் பெரிதும் பாழ்ப்படுத்தியுள்ளது.

இதனால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். அண்டை மாநிலங்களுடன் எப்போதும் சுமூகமாகவும், சகோதர மனப்பான்மையுடனும் என்றும் அணுகி வரும் தமிழகத்தின் முயற்சிகளுக்கு மாறாக,ஒவ்வொரு வருடமும் தமிழகத்திற்கு கிடைக்கும் நீர்பாசன ஆதாரங்களை முடக்குவதும்,மாநிலங்களுக்கு மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் ஒப்பந்தங்களை மீறி

அநியாயமாக தடுப்பணைகள் கட்டுவதும் அண்டை மாநிலங்களின் எதேச்சதிகாரமான போக்காக மாறி வருகிறது.

தற்போதைய சூழலில், நாட்டின் விவசாயிகளையும், விவசாயத்தையும் காப்பாற்ற நதிநீர் இணைப்பு மட்டுமே காலத்தின் கட்டாயம் என்பதையும், நீண்ட காலத்தீர்வு என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த தருணத்தில் 2002 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி, மிகச்சிறந்த தொலைநோக்கு பார்வை கொண்ட மறைந்த டாக்டர். அப்துல் கலாம் அவர்கள் தனது சுதந்திர தின உரையில் தெரிவித்ததை கனிவுடன் நினைவு கூறுகிறேன்.“ஒரு பக்கம் வெள்ளம், ஒரு பக்கம் வறட்சி என நமது தேசம் ஒரு முரண்பாட்டினை வெகு காலமாக கண்டும் உணர்ந்தும் வருகிறது. ஆதலால், நீர் மேலாண்மை தான் தற்போது நமது நாட்டிற்கு மிக அவசியம் தேவை” என்ற அந்த கருத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

நீர் நமது உணவுத் தேவைக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும், நாட்டின் உற்பத்தியினை துரிதமாக பெருக்குவதற்கும், சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், சுகாதாரம் மற்றும் நாட்டின்செழிப்பை பேணிப் பாதுகாப்பதற்கும் அத்தியாவசியத் தேவையாக அமைந்திருக்கிறது என்பதை நாம் அறிவோம்.

தேசிய நதிநீர் இணைப்பு திட்டம் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்னைகள் தீர்வதோடு, அண்டை மாநிலங்களுக்கு இடையில் அமைதி நிலவி, தேசிய ஒருமைப்பாட்டினை மேலும் வலுவாக்கவும், தேசிய வளர்ச்சி மற்றும் தேசிய பொருளாதாரம் மேம்படவும் மிகச்சிறந்த வாய்ப்பாக அமையும் என்பதால் நதி நீர் இணைப்புத் திட்டங்களில் மாண்புமிகு பிரதமர் அவர்கள் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்." என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு