செய்தி விவரங்கள்

ரஜினிக்கும் தி.மு.க-வினருக்கும் என்ன சம்மந்தம்? ராதாரவி ஏன் இப்படி பேசினார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விரைவில் திமுகவில் இணைவார் என்றும், தமிழகத்தில் விரைவில் திமுக ஆட்சி மலரும் என்றும் திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய நடிகர் ராதாரவி கூறியுள்ளார். ரஜினியால் அரசியலில் ஜொலிக்க முடியாது என்றும் ராதாரவி கூறியுள்ளார். ஊத்துக்கோட்டை அருகே உள்ள பாலவாக்கத்தில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய ராதாரவி, மதிமுகவை தாக்கினார். மதிமுகவிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதை தெரிந்து கொண்டுதான் வைகோ கடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவில்லை.

இது இப்படியே நீடித்தால் இனி கட்சி நடத்த முடியாது என்ற முடிவுக்கு வந்துள்ள வைகோ தாய் கட்சியான திமுகவில் இணைய முயற்சி செய்து வருகிறார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் பிரவேசிக்க உள்ளதாக செய்திகள் வந்து உள்ளன. ஒருவேளை அவர் அரசியலில் குதித்தால் ஜொலிக்க முடியாது. நான் நீண்ட நாட்களாக அரசியலில் உள்ளதால் இதை சொல்கிறேன். அரசியல் வேறு. சினிமா வேறு.

அதிமுகவில் தற்போது உச்சகட்ட குழப்பம் நிலவி வருகிறது. ஜனாதிபதி தேர்தல் முடிந்த பிறகு இந்த குழப்பத்திற்கு விடை கிடைக்கும். அப்போது எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்க வாய்ப்புகள் குறைவு. நாட்டில் வேலை வாய்ப்பு பிரச்சனை, குடிநீர் பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை. இப்படி பல பிரச்சனைகள் உள்ளன. இவற்றை தீர்க்க முடியாத மோடி அரசு சிறுபான்மையினரின் மனதை புண்படும் விதத்தில் மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது என்ற சட்டத்தை இயற்றி உள்ளது. இந்த பொருளைத்தான் உண்ண வேண்டும் என்று கட்டாயப்படுத்த நாட்டில் யாருக்கும் உரிமை கிடையாது. இதை பா.ஜ.க. உணர வேண்டும்.

மத்தியில் உள்ள பாஜக அரசு மாநில அரசுகளை மிரட்டி ஆட்சி செய்து வருகிறது. தமிழ்நாட்டை அவர்களது கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள பாஜக கட்சியினர் முயற்சி செய்து வருகின்றனர். அக்கட்சியின் மாநில தலைவர் விரைவில் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி ஏற்பட போகிறது என்று அடிக்கடி பேசி வருகிறார். விரைவில் அல்ல 400 ஆண்டுகள் ஆனாலும் தமிழ்நாட்டில் பாஜகவினால் ஆட்சி ஏற்படுத்த முடியாது. தமிழ்நாட்டில் விரைவில் திமுக ஆட்சி மலர உள்ளது என்றும் கூறியுள்ளார் நடிகர் ராதாரவி.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு