செய்தி விவரங்கள்

ஸ்ரீலங்கா அரசிற்கு காத்திருக்கும் நெருக்கடி

2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் இறுதிக்கட்ட போரில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்படும் என்ற வாக்குறுதி தொடர்ந்தும் இழுத்தடிக்கப்பட்டு வரும் நிலையில் அதன் அமுலாக்கம் குறித்து எச்சரிக்கையுடன் கூடிய நினைவூட்டலை ஐக்கிய நாடுகள் சபை வழங்கியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 36 ஆவது கூட்டத்தொடர் நேற்று முன்தினம் ஆரம்பமாகியுள்ள நிலையிலேயே ஐக்கிய நாடுகள் சபை இந்த அறிவூட்டலை ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளது.

ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்ததின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய உள்ளக விசாரணை நடத்தப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற பிரேரணை 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது.

இந்த பிரேரணைக்கு நல்லாட்சி அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியிருந்தது.

எனினும் உள்ளக விசாரணை இடம்பெறும் என்றும் உள்ளக விசாரணையில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்க முடியாது எனவும் அரசாங்கம் தெரிவித்திருந்ததுடன் அதே நிலைப்பாட்டிலேயே தொடர்ந்தும் பயணித்து வருகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி இறுதிக்கட்ட யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டது.

யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து அப்போதைய ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கி மூன் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்து யுத்த அழிவுகளை பார்வையிட்டிருந்தார். 

இந்த விஜயத்தின் போது பான் கி மூனிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்குமிடையில் பொறுப்புக் கூறும் விடயம் தொடர்பில் ஒப்பந்தம் ஒன்றும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதற்கமைய மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று உறுதி மொழி வழங்கப்பட்டிருந்தது.

எனினும் விசாரணைகள் மேற்கொள்ளப்படாததை தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் ஸ்ரீலங்காவிற்கு எதிராக அமெரிக்காவினால் பிரேரணை கொண்டு வரப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு மற்றும் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்களிலும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டன.

எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அப்போதைய அரசாங்கம் எந்தவொரு விசாரணைகளையும் மேற்கொள்ளாததுடன் ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழுவினை நாட்டிற்குள் அனுமதிக்கவும் இல்லை.

இதனால் சர்வதேச சமுகம் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அப்போதைய அரசாங்கத்திற்கு கடும் அழுத்தங்களை பிரயோகித்திருந்தது.

இந்நிலையில் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றதை தொடர்ந்து நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டது.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறிய பின்னர் பொறுப்புக் கூறும் விடயத்தில் 6 மாத கால அவகாசம் வழங்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் 2015 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

இதனையடுத்து ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய உள்ளக விசாரணைப் பொறிமுறையின் கீழ் விசாரணைகள் நடத்தப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டும் என கோரும் பிரேரணை ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டது.

இந்த பிரேரணைக்கு நல்லாட்சி அரசாங்கம் இணை அனுசரணை வழங்கிய போதிலும் பொறிமுறைக்கான செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்படாமையினால் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் அரசாங்கத்திற்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டது.

எனினும் இரண்டு வருட கால அவகாசத்தினுள் பொறுப்புக் கூறும் விடயத்தில் அரசாங்கம் அக்கறை காட்டுமா என்ற சந்தேகம் தற்போது ஏற்பட்டுள்ளது.

இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டு 6 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் பொறுப்புக் கூறும் விடயத்தின் முன்னேற்றம் தொடர்பில் அரசாங்கம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

ஆனால் விசாரணை நடத்துவதற்கான உள்ளக பொறிமுறை இதுவரை உருவாக்கப்படாத நிலையில் மைத்திரி ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் பொறுப்புக் கூறும் விடயத்தில் அக்கறை  செலுத்துமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

பொறுப்புக் கூறும் விடயத்தில் அரசாங்கம் இழுத்தடிப்பு போக்கை கடைப்பிடித்து வரும் நிலையில் முன்னாள் இராணுவத் தளபதியும் பிரேசிலுக்கான முன்னாள் ஸ்ரீலங்கா துாதுவருமான ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள விவகாரமானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜகத் ஜயசூரிய தொடர்பில் சாட்சியமளிக்க தான் தயார் என பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

சரத் பொன்சேகாவின் கூற்று தொடர்பில் விசாரரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ் அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் நேற்று ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் ஜயகத் ஜயசூரியவின் விவகாரமும் முன்வைக்கப்படக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன.

இவ்வாறான சூழலில் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் அறிக்கைகளை வெளியிட்டுவரும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஒரு மனநோயாளி என்று சர்வதேச சமூகத்தின் முன் நிரூபிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணி ஸ்ரீலங்கா  அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்டுவரும்  கருத்துக்களினால் போரை முடிவுக்கு கொண்டுவந்த மூன்று இலட்சம் படையினரின் உயிர்களுக்கு பெரும் அச்சுறுத்தல் பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்திருக்கின்றார்.

முன்னாள் இராணுவத் தளபதி ஜயகத் ஜயசூரியவின் விவகாரமானது இறுதிக்கட்ட யுத்ததில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.

ஆனாலும் இராணுவத் தளபதி முதல் கடைசி படை சிப்பாய் வரையில் அனைத்து படையினரது பாதுகாப்புக்கும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான சூழலில்  2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு கொண்டவரப்பட்ட போரின் இறுதிக் கட்டத்தில் யுத்தக் குற்றங்கள் உட்பட மனித குலத்திற்கு எதிரான கொடூரங்கள் இடம்பெற்றதை ஏற்கனவே ஐக்கிய நாடுகள் சபை இரண்டு தடவைகள் நடத்திய விசாரணைகளின் மூலம் நிரூபித்திருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார்.

இந்த நிலையிலேயே  ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் உட்பட மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஸ்ரீலங்காஅரசு நீதியை நிலைநாட்டத் தொடர்ந்தும் தவறினால் அந்த சம்பவங்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றத்தின் ஊடாக விசாரணை செய்ய வேண்டிய அவசியம் எழுந்துவிடும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயீத் ராத் அல் உசைன் ஸ்ரீலங்காவிற்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்திருக்கின்றார்.

ஸ்ரீலங்கா அரசாங்கம் நிறைவேற்றியுள்ள காணாமல் போனோர் அலுவலகத்தை தாமதமின்றி நடைமுறைப்படுத்துமாறும் ஸ்ரீலங்கா இராணுவம் உட்பட அரச படையினர் கையகப்படுத்தி வைத்துள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதை துரிதப்படுத்துமாறும் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் வழக்குகளை துரிதமாக முடிவுக்கு கொண்டவருமாறும் கோரிக்கை விடுத்துள்ள ஆணையாளர், சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை மதித்து அவற்றுக்கு மதிப்பளிக்கும் வகையில் புதிய சட்டத்தை இயங்குமாறும் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளார்.

அதேவேளை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய நிலைமாறுகால நீதிப் பொறிமுறையை உருவாக்குவது உள்ளிட்ட ஏனைய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு குறிப்பிட்ட கால வரையரையொன்றை வகுத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தியிருக்கின்றார்.

யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உண்மை நிலவரம் அறியப்பட வேண்டுமானால் ஜெனிவா பிரேரணைக்கு ஏற்ப உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். 

உரிய விசாரணை நடத்தாது குற்றமிழைத்த படையினரை காப்பாற்றுவதற்கு அரசாங்கமானது முயற்சிக்குமானால் அது நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஒரு போதும் முடியாது என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு