செய்தி விவரங்கள்

சம்பந்தனுக்கு பகிரங்கக் கடிதம்- நல்லாட்சியில் கண்டதுதான் என்ன?

எதிர்க்கட்சித் தலைவா் சம்பந்தன் அவர்களே-உங்களிடம் கேட்பதற்கு நிறைய உண்டு- ஆனால் இது செய்தித் தளம் என்பதால் இடப்பரப்பு குறைவு. அதனால் சுருக்கமாவே கேட்க முடியும். அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்பாக நீங்கள் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியமைக்கு முதலில் பாராட்ட முடியவில்லை. மன்னிக்கவும்.  

வணக்கம்-

மைத்திரி-ரணில் நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த நாள் முதல், அல்லது மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலுக்கான பொதுவேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாள் முதல், அல்லது பொது வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு சில மாதங்கள் முன்னரே நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு கொடுத்தீர்கள் என்பது வெளிப்படை.

குறிந்த பட்சம் முஸ்லிம் மற்றும் மலையக தமிழ் கட்சிகள் சம்பிரதாயபூர்மான எழுத்து மூல உத்தரவாதங்களைப் பெற்று பொதுவேட்பாளருக்கும் அதன் பின்னரான நல்லாட்சி அரசாங்கத்துக்கும் ஆதரவு கொடுத்தார்கள். கொடுக்கிறார்கள்.
ஆனால் நீங்கள் வாய்பேச்சில் கூட உத்தரவாதங்களை உரிய முறையில் பெற்றுக் கொள்ளாமல், அதீத நம்பிக்கையிலும் அதீ நவீன ஜனநாயக விட்டுக் கொடுப்பாகவும் ஆதரவு வழங்கினீர்கள். வழங்கி வருகின்றீர்கள்.

அதன்பயனாக எதிர்க்கட்சித் தலைவர் பதவியும், செல்வம் அடைக்கலநாதனுக்கு நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் பதவியும் கிடைத்து. ஆக மொத்தம் 70 ஆண்டுகால அரசியல் போராட்டத்தில் கடந்த 30 ஆண்டுகள் யுத்தம் நடத்தி, அதுவும் முள்ளிவாய்க்காலுடன் கொடூரமாக யுத்தம் அழிக்கப்பட்ட நிலையில், உங்களுக்கு கிடைத்த பரிசுகள்தான் அந்தப் பதவிகள்.

சரி- சமஷ்டியும் வேண்டாம், வடக்கு கிழக்கு இணைப்பும் வேண்டாம். எந்தத் தீர்வுமே வேண்டாம். ஆனால் தற்போது நடைமுறையில் உள்ள அரசியல் யாப்பின் மூலமான குறைந்த பட்ச அதிகாரங்களைக் கூட உங்களால் பெறமுடியாமல் உள்ளதே?

உங்களுடைய எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது ரணில் விக்கிரமசிங்க 17 ஆண்டுகள் வகித்த எதிர்க்கட்சித் தலைவர் பதவி போன்றதல்ல. மாறாக உங்களுக்கு வழங்கப்பட்ட பதவி என்பது, தமிழர்கள், இலங்கையின் அரசியலமைப்பை ஏற்றுள்ளனர் என்றும், இனப்பிரச்சினை என்பதை உள்ளக விவகாரமாக மாற்றுவதற்காகவும் வழங்கப்பட்ட பதவிதான் அது.

போர்க்குற்ற விசாரணை, அது, இது எல்லாமே உங்கள் பதவியால் தவிடுபொடியாகி விட்டன. இடைக்கால அறிக்கையை உங்கள் சுமந்திரன் அமெரிக்கா வரை சென்று வரவேற்றுள்ளார். ஆகவே இனி எதுவுமே இல்லை. சரி உங்கள் ஆதரவின் பயனாக அரசாங்கம் தமிழர்களுக்குச் செய்ததுதான் என்ன?

ஆகக் குறைந்த பட்சம் மஹிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட மன்னார், வவுனியா மாவட்டங்களுக்கான சிங்கள அரசாங்க அதிபர்களைக் கூட, உங்கள் நல்லாட்சி அரசாங்கம் மாற்ற விரும்பவில்லையே? அது பற்றி உங்களால் பேசக் கூட முடியவில்லையே?

வடக்கு கிழக்கில் இரணுவத்தின் எண்ணிக்கையக் கூட குறைக்க முடியவில்லையே? அரசியல் கைதிகளைக் கூட விடுவிக்க முடியவில்லையே? முன்னாள் போராளிகள் இரகசிய முகாம்களுக்குள் தவிக்கின்றனர். விடுதலை பெற்ற போராளிகள் பலர் வாழ முடியாமல் மரணிக்கின்றனர்.

ஆகவே அரசாங்கத்தின் தமிழர் தொடர்பான அத்தனை நடவடிக்கைகளையும் ஆதரிப்பதற்கும் சர்வதேசத்திடம் நியாயப்படுத்தவும் வழங்கப்பட்ட பதவிதான் உங்கள் எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்று மக்கள் கருதுகின்றனர்.

சிலவேளை தமிழர்களின் காணிகளை அரசாங்கம் விடுத்து வருவதாக நீங்கள் கூறலாம். மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டு விட்டதாகவும் நீங்கள் சொல்லாம். ஆனால் அவை அனைத்தும் தமிழர்கள் கேட்ட உரிமையல்ல. மாறாக அத்தனையும் யுத்தத்தின் பக்கவிளைவுகள்.

ஆகவே அந்தப் பக்க விளைவுகளுக்கு தீர்வைக் காண வேண்டியது அரசாங்கத்தின் பெறுப்பு. அதை செய்து விட்டு நீங்களும், உங்கள் நல்லாட்சி அரசாங்கமும் தமிழர்களுக்கு நிறையச் செய்து விட்டோம் என்று கூறி மார் தட்ட முடியாது.

இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக எதிர்க்கட்சி ஒன்று அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கியுள்ளது என்றால் அது உங்கள் தமிழரசுக் கட்சிதான். 72-78ஆம் ஆண்டுகளில் செய்யப்பட்ட இரண்டு குடியரசு அரசியல் யாப்புக்களையும் எதிர்த்த தமிழ்த் தலைவர்கள், 2017இல் மூன்றாம் குடியரசு அரசியல் யாப்புக்கான இடைக்கால அறிக்கையை நியாயப்படுத்தியுள்ளனர். அமிர்தலிங்கம் உயிரோடு இருந்திருந்தால் சிலவேளை தற்கொலை செய்ய நேரிட்டிருக்கும்.

இடைக்கால அறிக்கையில் சமஷ்டி இல்லை, வடக்கு கிழக்கு இணைப்பு இல்லை என்று அமைச்சர் மனே கணேசன் ஆரம்பம் முதலே பகிரங்கமாகக் கூறிவிட்டார். அமைச்சராக இருந்து கொண்டு அவர் அவ்வாறு துணிந்து கூறியுள்ளார். ஆனால் நீங்கள் ஒற்றையாட்சிக்குள் சமஷ்டி இருப்பதாக கதைவிடுகின்றீர்கள்.

வழிகாடல் குழுவில் அமைச்சர் மனே கணேசன் எதுவுமே பேசவில்லை. நாங்கள்தான் பேசினோம் என்று சுமந்திரன் பதிலுக்கு கூறுகின்றார். ஆனால் பொறுபுள்ள நீங்கள் ஏன் அது பற்றி மௌனமாக இருக்கின்றீர்கள்? யாழ் பல்கலைச் சமூகம் இடைக்கால அறிக்கையை நிராகரித்து விட்டது. இதற்குப் பின்னரும் எப்படி அதனை நீங்கள் நியாயப்படுத்துவீர்கள்?

சரி, அதை விடுங்கள். அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 18 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் மூன்று தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளீர்கள்-  பொறுப்புள்ள தலைவர் என்ற அடிப்படையில் 18 நாட்களின் பின்னர்தான் உங்களுக்கு ஜனாதிபதிக்கு கடிதம் எழுத வேண்டும் என்ற ஞாபகம் வந்ததா?

அந்த மூன்று கைதிகளும் இருப்பது உண்ணாவிரதம். அவர்கள் சாப்பிட்டுக் கொண்டு சிறையில் இருக்கும் கைதிகள் அல்ல. சரி இதையும் விடுவோம். கிழக்கு மாகாணம் பறிபோய்விட்டதே?. நீங்கள் பிறந்து வளர்ந்த மாகாணம் அது. இனப்பிரச்சினை கூட உங்கள் நல்லாட்சி அரசாங்கத்தில், வடமாகாண பிரச்சினையாக மட்டும் மாறிவிட்டது. ஆகவே உங்கள் எதிர்க்கட்சித் தலைவர் பதவியால் வந்த பயன்தான் இவை என்று சொல்வதா? அல்லது உங்கள் வார்த்தையில் இதுதான் இராஜதந்திரம் என்று கூறுவதா? 

எனவே, உலகில் விடுதலை வேண்டிப் போராடிய சமூகம் ஒன்று, இறுதியில் இப்படி நாற்றம் எடுக்கும் நிலைமைக்கு வந்து விட்டமைக்கு உதாரணம், தமிழர்களாகத்தான் இருக்கப் போகின்றனர். அதற்காக உங்கள் தலைமைப் பதவிக்கு வாழ்த்துக்கள். முடிந்தால் பதில் தாருங்கள்- நன்றி

இப்படிக்கு

ஆசிரியர்

ஐ.பி.சி.தமிழ் செய்திகள் 

கொழும்பு

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு