செய்தி விவரங்கள்

ஜனாதிபதி மைத்திரி 2021ஆம் ஆண்டுவரை பதவியில் இருக்கமுடியும்?

ஜனாதிபதி மைத்திரி 2021ஆம் ஆண்டுவரை பதவியில் இருக்கமுடியும்? 

ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் தொடர்பாக தென்னிலங்கையில் கருத்துமுரண்பாடுகள் நிலவிவருகின்ற நிலையில், எதிர்வரும் 2021ஆம் ஆண்டுவரை அவர் தொடர்ந்தும் பதவியில் நீடிக்க முடியும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பாக ஸ்ரீலங்காவின் உச்சநீதிமன்றம் தனது வியாக்கியானத்தை நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கவுள்ள நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரும், விசேட பணிகள் அமைச்சருமான சரத் அமுனுகம இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

கண்டி – கலகெதர தொகுதியிலுள்ள தனது ஆதரவாளர்களை சந்திப்பதற்காக அமைச்சர் சரத் அமுனுகம இன்றைய தினம் சனிக்கிழமை விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

ஆதரவாளர்களையும், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுகின்ற சில வேட்பாளர்களையும் சந்தித்த அமைச்சர் அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கும் கருத்து வெளியிட்டார்.

2015ஆம் ஆண்டில் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் 2020ஆம் ஆண்டிலா அல்லது 2021ஆம் ஆண்டிலா முடிவடைகிறது என்ற குழப்பநிலைக்கு மத்தியில் உச்சநீதிமன்றத்தை ஜனாதிபதி நாடியிருக்கின்றார்.

உச்சநீதிமன்றம் நாளைய தினம் தமது வியாக்கியானத்தை அறிவிக்கவுள்ள நிலையில், இது தொடர்பாக சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டை அமைச்சர் சரத் அமுனுகம இன்று வெளியிட்டார்.

“நான் இதற்கு முன்னரும் கூறியுள்ளேன். ஜனாதிபதியின் அதிகாரங்களுக்கு அமைய அரசியலமைப்பின்படி பதவிக்காலம் 2020ஆம் ஆண்டுவரையா அல்லது 2021ஆம் ஆண்டு வரையா நீடிக்கப்படும் என்ற விவகாரத்தில் உச்சநீதிமன்றத்திலிருந்து தீர்வொன்றை எதிர்பார்க்கின்றார்.

அதேபோன்று உச்சநீதிமன்றுக்கு சுயாதீன நிலை உள்ளபடியினால் அவர்கள் வழங்கும் தீர்ப்புக்கு தலைசாய்ப்பதாக ஜனாதிபதி நேற்று கூறியிருக்கின்றார். எனவே இது ஒரு சட்டப்பிரச்சினை. எனினும் 2021ஆம் ஆண்டுவரை ஜனாதிபதி தொடர்ந்தும் பதவியில் இருக்கமுடியும் என்று நாங்கள் நினைக்கின்றோம்” என்றார்.

அண்மையில் நடைபெற்ற விசேட நாடாளுமன்ற அமர்வின்போது மத்திய வங்கி மோசடி விவகாரம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றுகையில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அணியினருக்கும் இடையில் பாரிய மோதல் ஏற்பட்டது.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட அமைச்சர் சரத் அமுனுகம, ஸ்ரீலங்காவில் ஊழலற்ற ஆட்சியை கொண்டுசெல்லத் தகுதியான ஒரே கட்சி சுதந்திரக் கட்சியே ஆகும் என்று தெரிவித்தார்.

 “நாடாளுமன்றத்தில் அன்றைய தினம் எந்தவொரு குற்றச்சாட்டையும் எதிர்கொள்ளாத கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியாகும். ஒருபுறத்தில் ஐக்கிய தேசியக் கட்சியினர் திருடர்கள் என்றும், மறுபக்கத்தில் தாமரை மொட்டுக் கட்சியிலுள்ளவர்கள் திருடர்கள் எனவும் குற்றஞ்சாட்டிக் கொண்டிருந்தனர். எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீது யாரும் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தவில்லை. எனவே இம்முறை தேர்தலில் எந்தவொரு ஊழலும் இல்லாத கட்சியாக எதிர்கொள்கிறோம்.

அதேபோல ஜே.வி.பியினரும் அப்படியே குற்றச்சாட்டு இல்லாதவர்களாக தேர்தலை எதிர்கொள்கின்றனர். எனவே இதனையே மக்களுக்கு தெளிவுபடுத்துகின்றோம். ஊழலற்ற ஆட்சியை கொண்டுசெல்லும் ஒரேயொரு தகுதியான கட்சியாக சுதந்திரக் கட்சியே இருக்கின்றது” என்று தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரி 2021ஆம் ஆண்டுவரை பதவியில் இருக்கமுடியும்? 

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு