செய்தி விவரங்கள்

மைத்திரி மஹிந்த இணைவு, இறுதி முயற்சியும் தோல்வி. பசில் மீது குற்றச்சாட்டு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைவதற்கான இறுதி சந்தாப்பமும் கைநழுவிட்டதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் சேர்ந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் இணக்கப்பாடு சாத்தியமில்லை என கூறப்படுகின்றது.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச இணைவதற்குத் தடையாக இருப்பதாக கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் கூறியதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார். அதேவேளை கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகள், பசில் ராஜபக்சவுடன் முரண்பட்டுள்ளதாகவும் கூட்டு எதிர்க்கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்துவதாகவும் கூறப்படுகின்றது.

முன்னாள் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, தினேஸ்குணவர்த்தன, விமல் வீரவன்ச, திஸ்ஸ விதாரண ஆகியோர் பசில் ராஜபக்சவுடன் முரண்பட்டுள்ள நிலையில், ஸ்ரீல்ங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படுமாறு மஹிந்த ராஜபக்சவுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று புதன்கிழமை நள்ளிரவு வரை இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டத்தில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றது என்றும் இணக்கப்பாடு எதுவும் ஏற்படவில்லை என்றும் உள்ளகத் தகவல்கள் தெரிவிப்பதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் கூறினார்.

அதேவேளை இணக்கப்பாடு ஏற்படாமையினால் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் தலைமையிலான பெதுஜன பெரமுன என்ற கட்சியின் மொட்டுச் சின்னத்தில் கூட்டு எதிர்க்கட்சி தேர்தலில் போட்டியிடவுள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தையும் பொதுஜன பெரமுன செலுத்தியுள்ளது.

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஏனைய சிறிய கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக முன்வைத்த கருத்துக்கள் தொடர்பாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிடுவது குறித்தும் மஹிந்த ராஜபக்ச தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தாமல் மௌனமாக இருப்பதாக மூத்த உறுப்பினர் ஒருவர் குற்றம் சுமத்தினார் என ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.

முன்னாள் அமைச்சர் இராதாகிருஷ்ணன் பசில் ராஜபக்சவை சந்தித்து கொழும்பு மாவட்டத்தில் தேர்தல் வேலைத் திட்டங்களை முன்னெடுப்பது குறித்து கலந்துரையாடியுள்ளதாகவும் செய்தியாளார் மேலும் தெரிவித்தார்.

 

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு