செய்தி விவரங்கள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் என்ன? புதிய பக்கம்..!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி வழக்கு தொடுத்தவருக்கு, நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என்றும், அது தொடர்பாக சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 186 பேரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி செல்வவிநாயகம் என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். செல்வவிநாயகம் தன்னுடைய மனுவில், ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகத்திற்கு விடை காணும் வகையில் விரிவான விசாரணை நடத்தக் கோரி, தான் காவல்துறையில் புகார் அளித்ததாகவும் ஆனால் அதன் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

எனவே ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 186 பேரிடம் விரிவான விசாரணை நடத்த காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று தன்னுடைய மனுவில் அவர் கூறியிருந்தார். இந்த வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த பொழுது, விசாரணையை இன்று ஒத்தி வைப்பதாக நீதிபதி அறிவித்தார். அதன்படி இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது வழக்கு தொடுத்த செல்வ விநாயகத்திடம், வழக்கு தொடர்பாக குறிப்பாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தரக் காரணம் என்ன? அங்குள்ள போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றவுடன், உடனடியாக அது தொடர்பாக மேலதிகாரிகளிடம் புகார் செய்தீர்களா? உள்ளிட்ட கேள்விகளை எழுப்பிய நீதிபதி, மனுதாரர் தன்னுடைய புகார் தொடர்பாக மேலும் விளக்கம் அளிக்குமாறும் உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு