செய்தி விவரங்கள்

அஹிம்சையும் ஆயுதப் போராட்டமும் கற்றுத் தந்த பாடங்கள். விமர்சகர்கள்

அஹிம்சையும் ஆயுதப் போராட்டமும் கற்றுத் தந்த பாடங்கள். விமர்சகர்கள்

தமிழ் மக்களின் 70 ஆண்டுகால அரசியல் போராட்ட வரலாற்றில் 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டம் பிரதான பங்கு வகித்ததாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.  13 ஆவது திருத்தச்சட்டம் இனப்பிரச்சனைக்கு தீர்வு அல்ல.

ஆனாலும் சரி பிழைக்கு அப்பால் அதிகாரப் பரவலாக்கம் என்ற அடிப்படையில் இலங்கையின் அரசியலமைப்பில் அந்த சட்டமூலம் இணைக்கப்பட்டமைக்கு ஆயுதப் போராட்டமே காரணம் என்றும், மூத்த தமிழ் தலைவர்களின் அஹிம்சைப் போராட்டத்தால் இதுவரை எந்தத் தீர்வும் ஏற்படவில்லை எனவும் விமர்சகர்கள் கூறியதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் குறிப்பிட்டார்.

ஆயுதக் குழுக்களையும் இணைத்துக் கொண்டு தமிழரசுக் கட்சி பயணிக்கும் என சட்டத்தரணி சுமந்திரன் செய்தியாளர்களிடம் கூறிய கருத்துக்கு விளக்கமளித்த விமர்சகர்கள் ஆயுதப் போராட்டத்திற்கான முழக்கங்களை அன்றைய தமிழ்த் தலைவர்கள் மேற்கொண்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

1969 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய வீ.என்.நவரட்ணம் தமிழர்களின் இறைமையை வலியுறுத்தி தாயகக் கோட்பாட்டை நியாயப்படுத்தினார். தமிழரசுக் கட்சியும், 1977 ஆம் ஆண்டு உருவாக்கப்ட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியும் தமிழ் ஈழமே தீர்வு என அன்று கூறியது.

தந்தை செல்வா, அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் போன்ற தலைவர்கள் 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழ் ஈழமே திர்வு என்று மேடை மேடையாக பேசினர். அத்துடன் இலங்கை அரசுக்கும் எச்சரிக்கை விடுத்தனர். வட்டுக் கோட்டையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

ஆகவே அன்று தமிழ் இளைஞர்கள், இலங்கை இராணுவத்துக்கு எதிராக ஆயுதங்களை தூக்குவதற்கு முன்னைய தமிழ்த் தலைவர்கள் காரணம் என்பதை ஞாபகமூட்ட வேண்டிய அவசியம் இல்லையெனக் கூறிய விமர்சகர்கள், 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் குறிப்பிட்டனர்.

ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கங்களின் அனைத்து உறுப்பினர்களுக்கும் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில் ஜனநாயக வழியில் அரசியல் ஈடுபடுவதற்கு உரிமையுண்டு. 1986இல் புலிகளுடன் முரண்பட்டு வெளியேறிய இயக்கங்கள் கூட ஏதோ ஒரு வழியில் அரசியலில் ஈடுபட்டு 2000ஆம் ஆண்டின் பின்னர் குறிப்பாக நோர்வேயின் சமாதான பணி 2002இல் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்து அரசியலில் ஈடுபட்டனர்.

ஆனாலும் சில இயக்கங்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து அரசியலில் ஈடுபடமுடியவில்லை. எனினும் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில் முரண்பாட்டில் உடன்பாடாக அனைவரும் ஒரே புள்ளியில் நின்று அரசியலில் ஈடுபட வேண்டிய கட்டாயச் சூழல் ஒன்று ஏற்பட்டது.

இந்த நிலையில் ஆயுதப் போராட்டத்திற்கு முன்னர் அரசியலில் ஈடுபட்ட தமிழ்க் கட்சிகள் சுத்தமானவை என்றும்  ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை இயக்கங்கள் இரத்தக் கறைபடிந்தவை என்ற தொணியில் கூறுவதும் ஆரோக்கியமான பேச்சு அல்ல.

ஆயுதப் போராட்டத்தில் அனைத்து தமிழர்களுக்கும் பங்களிப்பு இருந்தது. போராட்டம் முள்ளிவாய்க்காலுடன் அழிக்கப்பட்ட நிலையிலும் அதன் தொடர்ச்சியாக, ஆனால் அஹிம்சை வழியாலான அரசியல் உரிமைக் கோரிக்கையை ஒன்று சேர்ந்து வலியுறுத்துவதுதான் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான ஆரோக்கியமான அரசியல் நகர்வு என விமர்சகர்கள் கூறுயுள்ளனர்.

2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் இடம்பெற்ற தேர்தல்காலங்களில் புலிகளின் போராட்டத்தை நியாயப்படுத்தி பிரபாகரனின் பெயரை உச்சரித்து சில மூத்த தலைவர்கள் வெற்றிபெற்றனர். எனவே மிதவாதிகள் என தம்மை அடையாயப்படுத்தும் மூத்த தமிழ்த் தலைவர்களுக்கு ஆயுதப் போராட்டத்தின் நல்ல பக்கங்களை ஏற்றுக் கொள்ளத் தெரிய வேண்டும்.

போராளிகளுக்கு அன்று ஆயுதப் பயிற்சியும் பணமும் கொடுத்தது இந்திய அரசு என்பது உலகம் அறிந்த உண்மை. ஆகவே ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு, இன்று ஜனநாயக அரசியலில் ஈடுபடுவோரைப் பார்த்து ஏளனமாகப் பேசுவது பாதிக்கப்பட்ட சமூகத்துக்கான நாகரீகமான அரசியல் பேச்சுக்கள் அல்ல என்று விமர்சகர்கள் வலியுறுத்தியதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் மேலும் கூறினார்.

 

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு