செய்தி விவரங்கள்

ஆனந்த சுதாகரன் விடுதலை செய்யப்படவில்லை. மகசீன் சிறையில் பிள்ளைகள் அழுதுபுலம்பல்

அரசியல் கைதி, ஆனந்த சுதாகரன் இன்று திங்கட்கிழமை விடுதலையாவார் என எதிர்பார்க்கப்பட்டபோதும், விடுதலை செய்யப்படவில்லை என அருட் தந்தை சக்திவேல் கூறியதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று திங்கட்கிழமை கொழும்பு மகசீன் சிறைச்சாலைக்குச் சென்ற ஆனந்த சுதாகரனின் இரண்டு பிள்ளைகளும், அவரை பார்வையிட்டு உரையாடி, கண்ணீர் சிந்தி அழுததாக அருட்தந்தை சக்திவேல் குறிப்பிட்டார்.

சித்திரைப் புதாண்டுக்கு முன்னர் ஆனந்த சுதாகரன் விடுதலை செய்யப்படுவார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்திருந்தார். ஆனால் சித்திரைப் புத்தாண்டு முடிவடைந்து இரண்டு வாரங்கள் சென்ற நிலையிலும் அவர் விடுதலை செய்யப்படவில்லை.

இன்று திங்கட்கிழமை வெசாக் பண்டிகை என்பதால், தந்தை விடுதலை செய்யப்படுவார் என்ற நம்பிக்கையில், இரு பிள்ளைகளும் கொழும்புக்கு வந்ததாகவும், ஆனால் விடுதலை செய்யப்படுவதற்கான உத்தரவு, சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் இருந்து கிடைக்கவில்லை என சிறைச்சாலை அதிகாரிகள் கூறியதாகவும் அருட்தந்தை சக்திவேல் கவலையுடன் தெரிவித்தார்.

இதனால், ஏமாற்றம் அடைந்த நிலையில் இரண்டு பிள்ளைகளும் மீண்டும் கிளநொச்சிக்கு சென்று விட்டதாகவும், ஜனாதிபதி இரண்டு பிள்ளைகளையும் ஏமாற்றிவிட்டார் எனவும் அருட்தந்தை சக்திவேல் குற்றம் சுமத்தியதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் கூறினார்.

அதேவேளை சிறைச்சாலையில் தமது தந்தையை பார்வையிட்ட இரண்டு பிள்ளைகளும் கண்ணீர் விட்டு அழுது புலம்பியதாகவும், தங்களுக்கு அப்பா வேணும் என்று சிறைச்சாலை அதிகாரிகளிடம் வலியுறுத்தி உருக்கமாக கோரிக்கை விடுத்ததாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

2007ஆம் ஆண்டு, கொழும்பு ஹொரன பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட ஆனந்த சுதாகரனுக்கு கடந்த ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தன்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.

இந்த நிலையில், இரண்டு பிள்ளைகளுடனும் கிளிநொச்சியில் வாழ்ந்து வந்த அவரது மனைவி யோகரானி, சுகவீனம் காரணமாக கடந்த மார் மாதம் உயிரிழந்தார்.

அதனையடுத்து ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யுமாறு பொதுமக்கள், பொது அமைப்புகள், மற்றும் தமிழ் அரசியல் தலைவர்கள் பலரும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதேவேளை வெசாக் பண்டிகையை முன்னிட்டு, நாடு முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சமூகவிரோத குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்த கைதிகள் பலருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளார்.

ஆனால் ஆனந்த சுதாகரன் உட்பட தமிழ் அரசியல் கைதிகள் எவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு