செய்தி விவரங்கள்

மஹிந்தவுடன் இரகசிய ஒப்பந்தம் செய்த பௌத்த பிக்குகள்; பட்டியலிடும் விக்கிரமபாகு!

மஹிந்தவுடன் இரகசிய ஒப்பந்தம் செய்த பௌத்த பிக்குகள்; பட்டியலிடும் விக்கிரமபாகு!

புதிய அரசியலமைப்புக்கு எதிராக மக்களை திசைதிருப்புவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் திரைமறைவிலான ஒப்பந்தங்களை சில இனவாத சிந்தனை கொண்ட பௌத்த பிக்குகளே செய்துகொண்டிருப்பதாக நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன குற்றம் சாட்டியுள்ளார்.

பொதுபல சேனா, ராவணா பலய உள்ளிட்ட இனவாத பௌத்த அமைப்புக்களும் இந்த ஒப்பந்தத்தில் இணைந்திருப்பதாகவும் அவர் பட்டியலிட்டுக் காண்பித்தார்.

நவ சமசமாஜக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்றது.

புதிய அரசியலமைப்புக்கு எதிராக மக்களைத் திசைதிருப்பும் முயற்சிகளில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அணியுடன் சில கடும்போக்குவாத பௌத்த அமைப்புக்களும் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் இது தொடர்பாக கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெளிவுபடுத்தினார்.

“ஒருமுறை ஏமாற்றமடைந்ததால் மற்றொருமுறை ஏமாற்றமடைய இயலாது. மக்களுடனேயே தாம் ஒப்பந்தம் வைத்துக் கொள்வதாக அநுராதபுரத்தில் வைத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருக்கின்றார். இவரிடம் ஒரு கேள்வியை கேட்கவிரும்புகிறேன். எந்த மக்களுடன் நீங்கள் ஒப்பந்தம் செய்துகொண்டீர்கள்? அவருடன் இந்நாட்டிலுள்ள இனவாதிகளே ஒப்பந்தம் செய்துகொண்டிருப்பதாக மிகத் தெளிவாக தெரிகிறது. தேரர்களும் இவ்வாறு மஹிந்தவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கின்றனர். மல்வத்துப்பீட மகாநாயகரை அண்மையில் நான் சந்தித்தபோது, புத்தபெருமானின் நோக்கத்தின்படி அனைத்து மனிதர்களுக்கும் சமமான உரிமை இருக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டார். மஹிந்த ராஜபக்சவுடன் பொதுபல சேனாவும், ராவணா பலய ஆகியோருமே ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கின்றனர். கலாநிதி இந்துலாகல தர்மரத்ன, பெங்கமுவே நாலக்க தேரருடன் சேர்ந்து இனங்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்தும் பொறி என்று அரசியலமைப்பை அர்த்தப்படுத்தியுள்ளனர். மேலும் ரோஹண சங்க சபை, புதிய அரசியலமைப்பு அவசியமற்றது என்பதை ஏகமனதுடன் தீர்மானித்திருப்பதாக கூறியிருக்கிறது. நான் நினைக்கிறேன் இவர்களே மஹிந்த ராஜபக்சவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறார்கள்” என்று மேலும் குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு