செய்தி விவரங்கள்

உங்கள் சிறுநீரின் நிறம் என்ன? உங்களுக்கு இந்த நோய்களெல்லாம் இருக்கலாம்!

உங்கள் சிறுநீரின் நிறம் என்ன? உங்களுக்கு இந்த நோய்களெல்லாம் இருக்கலாம்!

சமீபத்திய ஆய்வு ஒன்று மக்களது சிறுநீரின் நிறத்தினை வைத்து அவர்களது ஆரோக்கியத்தினைக் கணித்துள்ளது. அது தொடர்பான குறிப்புக்களினை இங்கே தருகின்றோம்.

மனிதனின் பிரதானமான கழிவகற்றும் தொகுதியாக சிறு நீர்த் தொகுதியே விளங்குகின்றது. இது நான்கு பகுதிகளைக் கொண்டதாகும். குறிப்பாக இரண்டு சிறுநீரகங்கள், இரண்டு சிறுநீர்க் குழாய்கள், சிறுநீர்ப்பை, சிறுநீர்வழி ஆகியனவே அவை.

மனித ஆரோக்கியத்தை சிறுநீர்த் தொகுதியே தீர்மானிக்கின்றது. அவற்றில் சிறு நீரின் நிறம் என்பது முக்கியமாகப் பார்க்கப்படவேண்டியதாகும்.

ஒரு மனிதனின் சிறு நீர் எந்த நேரமும் ஒரே மாதிரியான நிறத்தினைக் கொண்டிருப்பதில்லை. அது, நேரத்துக்கு நேரம் நமது உடல் நிலையினை அடிப்படையாக வைத்து நிறம் மாறவல்லது.

இதுபற்றி லண்டனைத் தளமாகக் கொண்ட Bupa Health Clinic மையத்தின் மருத்துவர் Luke Powles கருத்து வெளியிட்டுள்ளார். அதாவது ஒரு மனிதனின் சிறு நீரின் நிறமானது உடலின் நீரேற்ற அளவினைக் குறிப்பதாக கூறியுள்ளதோடு சிறு நீரின் ஒவ்வொரு நிறமும் எதனை வெளிப்படுத்துகின்றது என்பதனை பட்டியலிட்டுள்ளார்.

நிறமற்ற சிறுநீர் அல்லது தண்ணீர் போன்ற சிறுநீர் No Color/ Transparent

இது அதிகமான தண்ணீரை நீங்கள் பருகியுள்ளீர்கள் என்பதைக் காட்டும். இந்த வேளையில் நீங்கள் தண்ணீர் பருகுவதை மட்டுப்படுத்தலாம். அதாவது உடலுக்கு தண்ணீர் போதுமானதாகக் கிடைத்துள்ளது என்பதை உணர்த்துவதே இந்த நிறத்தினையுடைய சிறுநீர்.

வெளிர் நிறம் Pale Straw

இது, நீங்கள் சாதாரண நிலையிலுள்ள ஆரோக்கியத்தைக் கொண்டுள்ளீர்கள் என்பதைக் காட்டும் நிறமாகும். இதன்மூலம் உங்களது உடலில் சிறந்த நீரேற்றம் உள்ளது என்பதை அறிந்துகொள்ளலாம்.

வெளிப்படை மஞ்சள் Transparent Yellow

இதுவும் உங்கள் சாதாரண நிலையிலுள்ள ஆரோக்கியத்தினையே குறிக்கின்றது.

கடும் மஞ்சள் Dark Yellow

இதுவும் சாதாரண ஆரோக்கியத்தினைக் குறிக்கின்ற நிறம்தான். ஆனால் மிக விரைவில் உடலுக்கு தண்ணீர் தேவைப்படுகின்றது என்பதை வெளிப்படுத்தும் நிறமாகும். இந்த நேரத்தில் நாம் விரைவாக தண்ணீர் பருக வேண்டும்.

பிசின் அல்லது தேன் போன்ற நிறம் Amber or Honey

உங்களது உடல் போதிய நீரைக் கொண்டிருக்கவில்லை என்பதைக் குறிக்கும். அதாவது நீர்ச்சத்து குறைந்துவிட்டது என்பதைக் குறிக்கும் நிறமாகும். இந்த வேளையில் உடனடியாக நீரை அருந்தவேண்டும்.

பழுப்பு நிற சாராயம் போன்ற நிறம் Syrub or Brown Ale

நீங்கள் கல்லீரல் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கலாம், அல்லது கடுமையான நீர் இழப்புக்கு உங்கள் உடல் உள்ளாகியிருக்கலாம். இந்த வேளையில் உடனடியாக போதியளவு நீரினைப் பருகவேண்டும். இதுவே தொடர்ச்சியாக காணப்பட்டால் மருத்துவரை அணுகவேண்டும்.

இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு Pink or Reddish

இப்படியான நிறத்தில் சிறுநீர் கழிகின்றதெனில் இருவகையான காரணங்கள் இருக்கும். ஒன்று, நாம் அண்மையில் சாப்பிட்ட சிவப்பு நிறமான பழங்கள். இன்னொன்று, கடுமையான நோய் அறிகுறிகள். இதன்போது எம்மை நாமே சோதனை கொள்ளவேண்டும். பீற்றூட், அவுரிநெல்லி போன்றவற்றைச் சாப்பிட்டுள்ளோமா என பார்க்கவேண்டும். இல்லையெனில் எமது சிறு நீரில் இரத்தம் கலந்துள்ளது என்பதே முடிவு.

இது சிறு நீரகம் சார்ந்த நோய் அறிகுறியாக இருக்கலாம். அல்லது சிறுநீரக கட்டிகள், சிறு நீர்வழியில் காயங்கள், சுரப்பிகள் தொடர்பான பிரச்சினை போன்றனவாகவும் இருக்கலாம். இந்தவேளையில் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவேண்டும்.

செம்மஞ்சள் Orange

நீங்கள் போதியளவு நீர் குடிக்காமல் இருப்பதனால் இது ஏற்பட்டிருக்கலாம். அல்லது நீங்கள் கல்லீரல் மற்றும் பித்தப்பை தொடர்பான பிரச்சினையைச் சந்தித்திருக்கலாம். சிலவேளைகளில் இவ்வாறான செம்மஞ்சள் நாம் சாப்பிட்ட உணவில் உள்ள சாயத்தின் தன்மைக்கேற்பவும் அமையலாம். எதுவாயினும் இந்த நிலை நீடித்தால் தாமதிக்காது வைத்தியரை அணுகவேண்டும்.

நீலம் மற்றும் பச்சை Blue and Green

சில, அரிதான மரபணுக் கோளாறுகள்கூட உங்கள் சிறுநீரின் நிறத்தினை நீலம் அல்லது பச்சையாக மாற்றலாம். சில பக்ரீரியா நுண்ணுயிர்கள் சிறு நீர் பாதையைப் பாதித்திருந்தாலும் இவ்வாறான நிறத்திற்கு சிறுநீர் மாற்றமடையும். ஆனாலும் மருத்துவ தேவைக்காக பயன்படுத்துல் சில மருந்துகளின் சாயமும் இந்த நிறங்களில் சிறுநீர் கழிவதற்கு காரணமாக அமையலாம். எவ்வாறாயினும் இதே நிலை நீடித்தால் மருத்துவரை அணுகவேண்டும்.

இவ்வாறாக சிறு நீரின் நிறங்கள் உடலின் வெவ்வேறு நிலைமைகளை உணர்த்துகின்றன. சில மருந்துப் பொருட்கள் மற்றும் போதைப் பொருட்கள் என்பனவும் சிறுநீரின் நிறத்துடன் நெருங்கிய தொடர்பினை உடையதாக விளங்குகின்றன.

உங்கள் சிறுநீரின் நிறம் என்ன? உங்களுக்கு இந்த நோய்களெல்லாம் இருக்கலாம்!

உங்கள் சிறுநீரின் நிறம் என்ன? உங்களுக்கு இந்த நோய்களெல்லாம் இருக்கலாம்!

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு