செய்தி விவரங்கள்

மோடியின் ஜிஎஸ்டியை புகழ்ந்து தள்ளிய டிரம்ப்! மோடி ரொம்ப நல்லவர்!

வெள்ளை மாளிகையின் அமைச்சக அரங்கில் நடைபெற்ற இருநாட்டு பிரதிநிதிகள் கூட்டத்திற்கு பின்னர் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்பும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, டெனால்டு டிரம்ப் தனது குடும்பத்துடன் இந்தியாவிற்கு வருமாறு அழைப்புவிடுத்தார். மிக முக்கியமான தருணத்தில் முக்கியமான பேச்சுவார்த்தையை இருவரும் மேற்கொண்டுள்ளதாகக் கூறினார்.

வரும் ஜூலை 1ந்தேதி முதல் ஜிஎஸ்டி வரி இந்தியாவில் அமலாக உள்ளதைச் சுட்டிக்காட்டிய டிரம்ப், இது மிகப்பெரிய வரிச் சீர்திருத்தம் என்றார். இந்தியாவிற்கு அதிக அளவு எரிசக்தியை வழங்க அமெரிக்கா தயாராக இருப்பதாகக் குறிப்பிட்ட அந்நாட்டு அதிபர் டிரம்ப், தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் என்கிற அடிப்படையில் இருநாடுகளும் இணைந்து தீவிரவாதத்தை ஒழிக்கும் என்று குறிப்பிட்டார்.

இதனிடையே, பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் எதிரொலியாக ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தலைவர் சையது சலாகுதீனை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் திலெர்சன் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜிம் மாத்திஸ் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். அப்போது சர்வதேச நாடுகளுக்கு தீவிரவாதிகளால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்தும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் தீவிரவாத அமைப்புகளுக்கு உதவுவது குறித்தும் எடுத்துரைத்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ஹஸ்புல் முஜாதீன் அமைப்பின் தலைவர் சையது சலாகுதீனை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதாகக் கூறிப்பட்டுள்ளது. அவருடன் அமெரிக்க குடிமக்கள் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் அமெரிக்காவில் சலாகுதினுக்கு சொந்தமாக உள்ள சொத்துக்கள் முடக்கப்படும் என்றும் அமெரிக்க வெளியிறவுத்த்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட இந்திய வெளியுறவுத்துறைச் செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லே, அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சருடனான மோடியின் சந்திப்பில் தீவிரவாத ஒழிப்பு முக்கிய விவாதமாக இடம்பெற்றதாகக் கூறினார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு