செய்தி விவரங்கள்

வித்தியா கொலை வழக்கு; ட்ரியல் அட் பாரை எதிர்த்த சட்டத்தரணியின் காரணங்கள்!

வித்தியா கொலை வழக்கு முக்கியமான கட்டத்திலிருக்கும் இந்தத் தருணத்தில் நீதி கருதி விசேட விசாரணைக்கு உட்படுத்தும் ட்ரியல் அட் பார் (trial-at-bar) வழக்கு விசாரணை நேற்று யாழ் மேல் நீதிமன்றில் கடும் எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் ஆரம்பமானது.
 
இந்த வழக்கில் ஐந்தாம் எதிரி சார்பாக சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி மன்றில் ஆஜராகியிருந்தார். இவர் பிரதம நீதியரசரால் அமைக்கப்பட்ட ட்ரயல் அட் பார் முறையினை எதிர்த்து விண்ணப்பம் ஒன்றினை மன்றில் சமர்ப்பித்திருந்தார். அதாவது வித்தியா கொலை வழக்குக்கும் ட்ரயல் அட் பார் முறைக்கும் சம்மந்தம் இல்லை என்பதே இவர் வாதமாக இருந்தது.
 
அதற்கு அவர் முன்வைத்த காரணங்களாக,
 
அரசாங்கத்திற்கு எதிராக போர் தொடுத்தல், அந்தப் போருக்கு உதவுதல் , அரசாங்கத்துக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுதல் , ஆபத்தான வெடி பொருட்கள் மற்றும் ஆயுதங்களைத் தம் வசம் வைத்திருத்தல் போன்ற குற்றசாட்டுக்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கே ட்ரயல் அட் பார் முறைக்கு அதிகாரம் உண்டு. ஆகவே இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் எதுவுமே சாட்டப்படாத வழக்கின் எதிரிகள் மீது இந்த வழக்கை விசாரிக்கும் நியாயாதிக்கம் இந்த ட்ரியல் அட் பார் முறைக்கு இல்லை” என்பனவே.
 
 
இந்த விண்ணப்பத்துக்கு தனது கடும் ஆட்சேபனையை தெரிவித்த பதில் சட்ட மா அதிபர் தனது நிலைப்பாட்டை மூன்று நீதிபதிகள் முன்னிலையிலும் உறுதியாக முன்வைத்தார். இந்த வழக்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த விசேட வழக்கு. எமது சட்ட மா அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்கவே நாட்டின் பிரதம நீதியரசாரால் இந்த ட்ரியல் அட் பார் அமைக்கப்பட்டது. எனவே அதுகுறித்த நியாயாதிக்கம் இந்த மன்றுக்கு உண்டு. ஆனாலும் எதிர்த்தரப்பு சட்டத்தரணி கூறிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கட்டாயம் ட்ரியல் அட் பார் முறையிலேயே விசாரிக்கவேண்டும் என்று மேலும் குறிப்பிட்டார்.
 
சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதியின் விண்ணப்பத்தை மன்றின் மூன்று நீதிபதிகளும் ஒருமித்து நிராகரித்ததோடு அதற்கான விளக்கத்தையும் தமது கட்டளையாகக் கொடுத்தனர்.
 
“மூன்று நீதிபதிகளும் ஐந்தாம் எதிரி சார்பு சட்டத்தரணியின் விண்ணப்பத்தினை ஏக மனதாக நிராகரிக்கின்றோம். மூன்று நீதிபதிகளுக்கும் இந்த வழக்கினை விசாரிக்கும் நியாயாதிக்கம் உண்டு. நீதியின் தேவை கருதி, அதன் நலன் கருதி விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதற்காக பிரதம நீதியரசரின் பரிந்துரைக்கு அமைவாகவே இந்த ட்ரயலட் பார் அமைக்கபப்ட்டது.” என்ற விளக்கத்தைக் கொடுத்தனர்.
 
இங்கு தொடர்ந்து உரையாற்றிய பதில் சட்ட மா அதிபர், இலங்கை வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பணத்தில் ட்ரயலட் பார் முறைமையில் விசாரணை நடைபெறுகின்றது. இது யாழ்ப்பணத்தில் சட்டத்தையும் வலுவான நீதியையும் நிலைநாட்ட உதவும் என தாம் நம்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
 
சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு