செய்தி விவரங்கள்

யாழ்ப்பாண மக்களை அண்ணாந்து பார்க்கவைத்த அந்த ஒளிக்கற்றைகள்

யாழ்ப்பாணத்தில் பறக்கும் தட்டுக்கள் வந்துவிட்டதாக நேற்று இரவு வெளியான வதந்தியை அடுத்து குடாநாட்டு மக்கள் மத்தியில் ஒருவித பதட்ட நிலை காணப்பட்டுள்ளது.

நேற்று சூரியன் மறைவுக்குப் பின்னர் யாழ் நகரத்திலிருந்து தென்மேற்கு வானத்தில் இரண்டு ஒளிக்கீற்றுக்கள் தென்பட்டுள்ளன. இதனைக் கண்ணுற்ற சிலர் அது பறக்கும் தட்டுக்கள் என்ற வதந்தியை சமூக வலைத்தளங்களில் பகிரவும் அச்செய்தி வேகமாக அனைவரிடமும் பரவி அனைத்து குடாநாட்டு மக்களும் வீட்டுக்கு வெளியே வந்து வானத்தையே பரபரப்போடு அண்ணாந்து பார்த்துள்ளனர்.

சுமார் மூன்று மணித்தியாலங்கள் வரை தொடர்ந்த இந்த பதட்டம் நள்ளிரவை நெருங்கும் நேரமே முடிவுக்கு வந்தது. அந்த ஒளிக்கீற்றுக்களுக்கான காரணம் வெளிவந்துள்ளது. யாழ் வேலணைத் தீவில் அமைந்துள்ள புளியங்கூடல் அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்த திருவிழாவை முன்னிட்டு இசை நிகழ்ச்சியொன்று நடத்தப்பட்டுள்ளது.

இந்த இசை நிகழ்ச்சியின் மேடை அலங்கரிப்புக்காக ஒளிச்செறிவுள்ள சுழல்விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த விளக்குகளின் ஒளிக்கற்றைகள் வானத்தில் காணப்பட்ட திரண்ட முகில் கூட்டங்கள் மீது பட்டுத் தெறித்துள்ளன. முகில் மீது பட்ட சுழல் விளக்குகளின் ஒளி முகங்களே மக்களுக்கு இவ்வாறான ஒரு பதட்டத்தைக் கொடுத்தது.

நள்ளிரவை நெருங்கும் வேளையில் திரண்ட முகில் கூட்டங்கள் கலைந்து போனதும் அந்த ஒளிக்கற்றைகள் காணாமல் போயின. அதன் பின்னர் உண்மை நிலவரம் அறிந்து மக்களின் பதட்டம் தீர்ந்தது.

பறக்கும் தட்டுக்கள் பற்றிய வதந்திகள் உலகளவில் பரவலாக காணப்படும் நிலையில் குடாநாட்டு மக்களையும் அது பாதித்துள்ளது என்பது கவனிக்கத்தக்கதாகும்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு