செய்தி விவரங்கள்

விக்னேஸ்வரனின் கொட்டத்தை ஜனாதிபதியே அடக்கவேண்டும்;சரத் வீரசேகர

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர புலம்பெயர் சிங்கள மக்களிடையே வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனை இனவாதி என கடுமையாக விமர்சித்துள்ளார்.

முதலமைச்சர் விக்னேஸ்வரனின் ஆட்டத்தை வடமாகாண ஆளுநரைக் கொண்டு ஜனாதிபதியே நிறுத்த வேண்டும் என்றும் அவர் ஆலோசனை ஒன்றையும் முன்வைத்துள்ளார்.

இத்தாலியில் வாழ்கின்ற புலம்பெயர் சிங்கள சமூகத்தினரின் ஏற்பாட்டில் நாபோலி நகரில் நேற்றைய தினம் விசேட செயலமர்வு ஒன்று நடைபெற்றது.

இதில் பிரமத விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரகேர கலந்துகொண்டு உரையாற்றினார்.

 “வடக்கில் முதலமைச்சர் ஒருவர் இருக்கின்றார். அவர்தான் விக்னேஸ்வரன். இனவாதி எனக் கூறுவது அவரைப் போன்றவர்கள் தான். மாறாக எங்களுக்கு அல்ல. தமிழ் மக்களையும், முஸ்லிம் மக்களையும் கொல்லும்படி நாங்கள் எப்போதும் கூறியதில்லை. ஆனால் சிங்கள இனத்தவர்களுக்கு ஏதாவது முறைகேடு இடம்பெற்றால் அதற்கெதிராக குரல் கொடுப்போம். அது இனவாதமல்ல. இனவாதம், இனவுணர்வு என இரண்டு உள்ளது. தமது இனம் உன்னதமானது என்றும் மற்றைய இனத்தவர்களை காலில் மிதிப்பதானது இனவாதமாகும். விக்னேஸ்வரன் வடக்கிற்குச் சென்று வடக்கில் சிங்களவர்கள் வாழ உரிமையில்லை என கூறுகின்றார். விக்னேஸ்வரன் என்பவர் யார்? கொழும்பில் பிறந்து ரோயல் கல்லூரி, சட்டக் கல்லூரி, நீதிமன்றம் என 65 வருடங்கள் சிங்கள மக்களுடன் வாழ்ந்துவிட்டு இன்று வடக்கிற்குச் சென்று சிங்களவர்களுக்கு வடக்கில் இடமில்லை எனக் கூறுகிறார். தமிழ் இளைஞர்கள், சிங்கள இளைஞர்களை திருமணம் செய்ய வேண்டாமென பிரசித்தமாக அவர் தெரிவிக்கிறார். ஆனால் அவருடைய இரு புதல்வர்களும் சிங்கள இன யுவதிகளைதான் திருமணம் செய்துள்ளனர். நாகதீபத்தில் ஒரு புத்தர் சிலையையாவது அமைக்க அவர் இடமளிப்பதில்லை. புத்தர் சிலைகளை அகற்றுமாறு அவர் கோஷம் எழுப்பி பேரணி செல்கிறார். ஒருவேளை வடக்கிலுள்ள சகல இராணுவ முகாம்கள், விகாரைகளை அகற்றுமாறு விக்னேஸ்வரன் நாளை சட்டமொன்றை கொண்டுவந்தால் அதனை ஆளுநரின் ஊடாக ஜனாதிபதியால் தடுத்துநிறுத்த முடியும். இப்பொழுதே விக்னேஸ்வரன் இவ்வாறு ஆடினால் அதிகாரங்கள் மேலும் வழங்கப்பட்டால் எவ்வகையான சட்டங்களை அவர் கொண்டுவருவார் என ஊகித்துக்கொள்ள முடியும்” என்றார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு