செய்தி விவரங்கள்

கற்றல் வேலையை மட்டும் செய்யுங்கள்: மாணவர்களுக்கு அரசாங்கம் அறிவுரை

கல்வி அமைச்சை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி பாரிய விளைவுகளை ஏற்படுத்திய பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பின்னால் முன்னிலை சோஷலிசக் கட்சியே செயற்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

முன்னிலை சோஷலிசக் கட்சியே இவ்வகையான போராட்டங்களுக்கு மாணவர்களைத் தூண்டிவருவதாகவும், இதற்கு மாணவர்கள் சிக்கிவிடாமல், கற்றல் நடவடிக்கையை மட்டுமே செய்ய வேண்டும் என்றும் சட்டம்,ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க அறிவுரை வழங்கினார்.

சைட்டம் தனியார் மருத்துவப் பல்கலைக்கழகத்தை மூடுமாறு கோரி கடந்த 22ஆம் திகதி கொழும்பிலுள்ள சுகாதார அமைச்சை முற்றுகையிட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் 4 மணிநேரமாக போராட்டர்ரில் ஈடுபட்டனர்.

இதன்போது அங்குவிரைந்த கலகம் தடுப்பு பொலிஸாரும், விசேட அதிரடிப் படையினரும் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சி செய்தனர்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டதுடன், 8 மாணவர்களும் 2 பொலிஸ் அதிகாரிகளும் காயமடைந்தனர். சுகாதார அமைச்சின் சொத்துக்களுக்கும் பாரிய சேதமும் ஏற்பட்டது.

இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தவில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சட்டம்,ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க இந்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்டார்.

“கடந்த 22ஆம் திகதி அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திலுள்ளவர்கள் சுகாதார அமைச்சுக்குள் நுழைந்து வன்முறைகளில் ஈடுபட முயற்சித்தனர். அந்த மாணவர்கள் தங்களுடைய சுயநோக்கத்திற்காக இந்த நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்பதே எங்களது நம்பிக்கை. அவர்களுக்குப் பின்னால் அரசியல் சக்தியொன்று செயற்படுகிறது. அந்த சக்தி தொடர்பான தகவலும் என்னிடம் உள்ளது. சோஷலிச முன்னிலைக் கட்சியே மாணவர்களை தூண்டிவிட்டது. ஏரிகிற நெருப்பில் மேலும் எண்ணெய் சேர்ப்பதற்கு இன்னும் சில அரசியல் கட்சிகள் இருக்கின்றன. மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தை மழுங்கடிக்கச் செய்யும் இவ்வாறான அரசியல் செயற்பாடுகளை யாருமே எதிர்ப்பார்கள். மாணவர்களின் எதிர்காலத்தை வளமாக்கச் செய்யும் நோக்கம் கொண்ட எந்த அரசியல் கட்சிகளும், பிரஜைகளும் இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கக்கூடாது. பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கையை பாதிப்படையச் செய்தால் அவர்கள் சமூகமயப்படும் காலம் தாமதமடையும். இது அரசியல் சதியாகும். ஜனநாயக அரசியலின் ஊடாக தங்களது அரசியல் நடவடிக்கையை செய்ய முடியாதவர்கள் மாணவர்களை கஷ்டத்திற்குள் தள்ளுகின்றனர். இதற்கு மாணவர்கள் சிக்கிவிடக்கூடாது. கல்வி கற்று நாட்டிற்கு எடுத்துக்காட்டாக செயற்படும் சிறந்த சமூகத்தினராக வருவதற்கே பல்கலைக்கழகத்திற்கு வருகின்றனர். ஆகவே கற்றல் நடவடிக்கையை மட்டுமே அவர்கள் கவனத்திற்கொள்ள வேண்டும்” என்றார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு