செய்தி விவரங்கள்

புங்குடுதீவு மாணவி வித்தியா, ஏன் பாலியல் வன்கொடுமையின்பின் கொல்லப்பட்டார்

புங்குடுதீவு மாணவி வித்தியா, ஏன் பாலியல் வன்கொடுமையின்பின் கொல்லப்பட்டார்

கடந்த 2015 ஆம் ஆண்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமையின் பின் படுகொலைசெய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கு தொடர்பாக இன்று காலை யாழ் மேல் நீதிமன்றில் 9.30 மணிக்கு ஆரம்பமான ட்ரயல் அட்பார் மன்றத்தில் பதில் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா ஆஜராகி தமது நிலைப்பாட்டை அறிவித்திருந்தார்.

சர்வதேசத்திற்கு ஆபாச காணொளி விற்பனை செய்யும் நோக்கிலேயே மாணவி வித்தியா பாலியல் வன்கொடுமையின்பின் கொல்லப்பட்டார் என்று பதில் சட்டமா அதிபர் நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

மேலும் இந்த வழக்கின் ஐந்தாவது சந்தேகநபர் மீது சுமத்தப்பட்டுள்ள 41 குற்றச்சாட்டுக்களையும் ட்ரயல் அட்பார் முறையில் விசாரிக்க முடியாது என ஐந்தாவது சந்தேக நபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டார்.

இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த பதில் சட்டமா அதிபர், இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் ட்ரயல் அட்பாருக்கு உள்ளதாக சுட்டிக்காட்டியதோடு இந்த வழக்கின் முக்கிய சூத்திரதாரி சுவிஸ் குமார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவி வித்தியாவை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தும் காட்சிகளை நேரடியாக பதிவு செய்து சர்வதேச நாடுகளில் விற்பனை செய்யும் நோக்கத்துடன் அவர் சுவிஸில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதற்காக சுவிட்சர்லாந்திலுள்ள ஒரு நிறுவனத்துடன் அவர் ஒப்பந்தம் செய்திருந்ததாகவும் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த சிறுமிகள் மற்றும் யுவதிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தும் காட்சிகளை இவர் விற்பனை செய்யும் செயற்பாட்டில் ஈடுபட்டு வந்ததாகவும் மேலும் குறிப்பிட்டார்.

”வழக்கின் ஒன்பது சந்தேகநகபர்களும் மாணவி வித்தியாவை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தி அவர்களே மாணவியை கொலை செய்துள்ளனர். சர்வதேச நிறுவனத்துடன் இணைந்து காட்டுமிராண்டித்தனமான இந்தக கொடூரம் இழைக்கப்பட்டதோடு, நாட்டிற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இந்த சம்பவம் இடம்பெற்றதை கூறுவதில் எனக்கு எவ்வித தயக்கம் இல்லை. வழக்கின் இரண்டாம், மூன்றாம், ஐந்தாம் மற்றும் ஆறாம் சந்தேகநபர்கள் உறவினர்கள். அவர்கள் அனைவரும் கூட்டாக சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியமை தெரியவந்துள்ளது. இந்த விடயங்களுக்கான ஆதாரம் சட்ட மாஅதிபர் திணைக்களத்திடம் இருக்கின்றது. விசாரணைகளின்போது அவற்றை சமர்ப்பிக்கவுள்ளேன்” என்று பதில் சட்டமா அதிபர் குறிப்பிட்டார்.

அதுதவிர இந்த சம்பவம் தொடர்பில் புலன் விசாரணையில் ஈடுபட்டிருந்த அதிகாரி ஒருவருக்கு சிறைச்சாலையிலிருந்த சுவிஸ் குமார் 20 மில்லியன் ரூபாவை இலஞ்சமாக கொடுப்பதற்கு முயற்சித்ததாகவும் இதற்கான ஆதாரமும் தம்மிடமுள்ளதாகவும் பதில் சட்ட மா அதிபர்  தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ் செய்திகளுக்கு ...

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு