செய்தி விவரங்கள்

50 நாட்களை கடந்தும் தீர்வின்றி தொடரும் இரணைதீவு மக்களின் நில மீட்பு போராட்டம்

மீன்பிடியை வாழ்வாதாரமாகக் கொண்ட கிளிநொச்சி – இரணைதீவு கிராம மக்களின் நில மீட்பு போராட்டம் இன்றுடன் 50 நாட்களையும் கடந்து தீர்வின்றி தொடர்ந்து செல்கின்றது.

இரணைதீவு – இரணைமாதா நகர் கிராமத்தின் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு முன்னால் கடந்த மே தினத்தன்று இந்த நில மீட்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

ஸ்ரீலங்காவில் நடைபெற்ற யுத்தம் காரணமாக 1982ஆம் ஆண்டு இரணைதீவில் வசித்த 176 குடும்பங்கள் மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளுக்கு   இடம்பெயர்ந்தனர்.

தமது காணிகளை கையகப்படுத்தியிருக்கும் ஸ்ரீலங்கா கடற்படையே தமது வாழ்வாதாரங்கள் அனைத்தையும் அனுபவித்து வருவதாக பாதிக்கப்பட்ட இரணைதீவு கிராம மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

இந்த பிரச்சினைகள் தொடர்பில் பலமுறை கிளிநொச்சியில் அமைந்துள்ள கடற்தொழில் நீரியல்வள திணைக்களத்திடம் முறைப்பாடு செய்ததாகவும் மக்கள் தெரிவிக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

இந்த நிலையில், பரம்பரை பரம்பரையாக தாம் தொழில் புரிந்த பகுதியை  கையகப்படுத்தியுள்ள ஸ்ரீலங்கா கடற்படை அந்த பகுதிகளை தம்மிடம் வழங்க  மறுத்து  வருவதாக  இரணைதீவு கிராம மக்கள்  குறிப்பிட்டுள்ளனர்.  

ஸ்ரீலங்கா கடற்படையினரால் அபகரிக்கப்பட்டுள்ள கடல்வளம் மற்றும் காணிகளை விடுவிக்கும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று கிளிநொச்சி – இரணைதீவு மக்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

அத்துடன், வெறும் கலந்துரையாடல்களை மட்டுமே நடத்தாது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தமது காணிகளை மீட்டுத்தர நடவடிக்கையெடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் வலியுறுத்தியிருந்தனர்.

கடற்தொழிலையே பிரதானமான வாழ்வாதாரமாக கொண்ட இந்த மக்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, அவர்களின் பாதுகாப்பிற்காகவே இந்த  காணிகள் விடுவிக்கப்படாமல் இருப்பதாக தெரிவித்த பாதுகாப்பு  இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேயவர்தன, பாக்கு நீரிணையை முழுமையாக கண்காணிக்கும் வகையில் இரணைதீவில் பாரிய ராடர் நிலையம் ஒன்றை கடற்படையினர் விரைவில் அமைக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இதனால் பெருமளவில் கதிர்வீச்சுக்கள் வெளிப்படுமென்பதால் இப்பகுதியில் மக்களை மீள்குடியேற்ற முடியாத நிலை இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இருப்பினும், இரணைதீவிலிருந்து வெளியேறிய மக்களை மீள்குடியேற்றுவதற்காக நாச்சிக்குடா, இரணைமடு பகுதிகளில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறியிருந்தார்.

இதேவேளை, இரணைதீவு நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானதொரு இடமெனவும் அதனால் அங்கு கடற்படை தளமொன்று அவசியத் தேவையாக உள்ளதாகவும் வலியுறுத்தியுள்ளார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரது இந்த கருத்தை புறக்கணித்த இரணைதீவு மக்கள், பிறரது கையை எதிர்பாராது வாழ்ந்த தாம் தற்போது அன்றாட வாழ்வைக் கொண்டு நடத்த முடியாது அல்லலுறுவதாகவும், அரசாங்கம் தெரிவிக்கும் சாட்டுப்போக்கை தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் வலியுறுத்தியிருந்தனர்.

இந்த நிலையில், ஸ்ரீ லங்கா அரசாங்கமும் எதுவித சாட்டுப்போக்கும் தெரிவிக்காமல், காலத்தை இழுத்தடிக்காமல் இரணைதீவு மக்களின் நியாயமான போராட்டத்தை அரசாங்கம் ஏற்றுக் கொண்டு பாதிக்கப்பட்ட மக்களை அவர்களது சொந்த இடத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,  வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா கோரிக்கை விடுத்திருந்தார்.

இதேவேளை, இந்த நில மீட்பு போராட்டத்தில் தமது உயிர் போனாலும் சொந்த நிலமான பாரம்பரியமாக தொழில் செய்து வந்த பூர்வீக நிலத்தை கடற்படையிருக்கோ அல்லது வேறு எந்தத் தேவைகளுக்கோ விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இரணைதீவு மக்கள் தமது முடிவில் தெளிவாக இருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

தமது உயிரை பற்றியும் சிந்திக்காத இந்த இரணைதீவு மக்களது போராட்டம் நியாயமானது என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்திருந்தார்.

இதேவேளை 400 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வசித்து வந்த மக்களது பூர்வீக காணி நிரந்தரமாக பறிபோகும் அபாயம் காணப்படும் நிலையில் உடனடியாக மக்களை மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் பங்கேற்ற அருட்தந்தை ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.

தொழிலின்றி நிராதரவாக தவித்துவரும் மக்கள், போராடித்தான் தீர்வைப் பெற வேண்டும் என ஸ்ரீலங்கா அரசாங்கம் நினைத்தால் போராட்ட வடிவத்தை மாற்றுவதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், ஏனைய மாவட்டங்களிலுள்ள பிரதேசங்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்திற்கு இந்த இரணைதீவு பிரதேசம் பெறுமதி வாய்ந்தது என தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, இரணைதீவு மக்களது போராட்டம் என்பது ஒட்டுமொத்த தமி்ழ் மக்களது போராட்டமே என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.

தமது பூர்விக நிலத்தை விடுவிக்குமாறு வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்து வரும் இரணைதீவு மக்கள் 2010ஆம் ஆண்டு முதல் தங்களை சொந்த நிலங்களில்  மீள குடியமர்த்துமாறு கோரிக்கை விடுத்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், இன்றைய தினம் இரணைதீவு மக்களை சந்தித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேயவர்தன இரணைதீவு காணியை மக்களிடம் கைளிப்பது தொடர்பில் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் ஸ்ரீலங்கா அரசாங்கம் பதிலளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

நிரந்தர காணியில் தம்மை மீள குடியமர்த்துமாறு வலியுறுத்தி தொடர் போரட்டத்தில் ஈடுபட்டுவரும் இரணைதீவு மக்களுக்கு காணி விடுவிப்பு குறித்து பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட குழுவினருக்கும், இரணைதீவு மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், 50 நாட்களையும்  கடந்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள்  எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

இரணைதீவு மக்களின்  தொடர் நில மீட்பு போராட்டம் குறித்து சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.

அத்துடன், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேயவர்தனவுடனும் அண்மையில் அவர் கலந்துரையாடியிருந்தார்.

மக்கள் கருத்துக்கு பதில் கருத்து வெளியிட்ட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், இரணைதீவு பகுதியானது ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு நடவடிக்கையில் முக்கிய தளமாக அமைவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் கடல் மார்க்கமாக ஸ்ரீலங்காவிற்குள் கடத்திவரப்படும் போதைப் பொருட்களைக் கண்காணித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு தேவைகளின் நிமித்தம் குறித்த பகுதியில் ராடர்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதன் போது கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இரணைதீவு மக்கள் பழங்குடி மக்கள் என்றும், அந்த மக்கள் அவர்களது சொந்த நிலத்தில் குடியமர்த்தப்பட வேண்டும் என்றும் இரண்டு வாரங்களுக்குள் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சாதமான பதில் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

பல தடவைகள் கோரிக்கைகளை முன்வைத்தும், வீதி மறியல் போராட்டங்களை நடத்தியும், பல மகஜர்களை கையளித்தும் கூட இந்த இரணைதீவு மக்களால் தமது சொந்த நிலங்களில் மீள குடியமர முடியாமல் உள்ளது. 50 நாட்களை போராட்டத்தால் கடந்த இந்த மக்களுக்கு கிடைத்தது  என்ன? வாழ்வாதாரமும்  பாதிக்கப்பட்டு சொந்த நிலத்தை மீட்பதற்காக இரவும் பகலும் வீதியில் நேரத்தை போக்குகின்றார்கள். ஊடகங்களுக்கு முன்னால் குரல் கொடுக்கும் தமிழ் அரசியல் தலைவர்கள்  போராட்டத்தில் ஈடுபடும்  மக்களை ஊக்கப்படுத்துகின்றார்களே தவிர தங்களது கடமைகளை செவ்வனே செய்கின்றார்களா என்பது கேள்விக்குறியே! 

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு