செய்தி விவரங்கள்

பெப்சி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தண்ணீர் வழங்க தடைகோரிய வழக்கு தள்ளுபடி.!

பெப்சி உள்ளிட்ட 25 நிறுவனங்களுக்கு, தாமிரபரணி நீரை வழங்க தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று உயர் நீதிமன்ற மதுரைகிளையால் தள்ளுபடி செய்யப்பட்டது.

நெல்லை தச்சநல்லூரைச் சேர்ந்த ராகவன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் "பெப்சி, கோக் உட்பட 25 நிறுவனங்களுக்கு தாமிரபரணி ஆற்றிலிருந்து தினமும் 48.66 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. இதனால், தாமிரபரணி ஆற்றை நம்பியுள்ள நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. விவசாயமும் பாதிக்கப்படுகிறது. எனவே, தாமிரபரணி ஆற்றிலிருந்து சிப்காட் நிறுவனங்களுக்குத் தண்ணீர் வழங்கத் தடை விதித்து உத்தரவிட வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.

"சிப்காட்டில் இயங்கிவரும் குளிர்பான ஆலைகளுக்குத் தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் வழங்குவது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும், பிற தொழிற்சாலைகளுக்கு குடிநீர் தேவைக்காக மட்டுமே தாமிரபரணியிலிருந்து தண்ணீர் வழங்கப்படுவதாகவும்" இந்த வழக்கு குறித்து  அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து சிப்காட் நிறுவனங்களின் சார்பில் "மாவட்ட நிர்வாகம் தரப்பிலிருந்து ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட அளவில் 50% தண்ணீரே வழங்கினர். தற்போது வறட்சியால் 10% நீரே வழங்கப்படுகிறது. நாங்கள் 1,000 லிட்டர் தண்ணீரை 18 ரூபாய் விலை கொடுத்தே வாங்குகிறோம். மேலும், தண்ணீர் வழங்குவது குறித்து மாவட்ட நிர்வாகமே முடிவுசெய்ய இயலும" எனத் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் ராகவன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் "பெப்சி நிறுவனத்தை தவிர இதர நிறுவனங்களுக்கு தொடர்ச்சியாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர்ச்சியாக தண்ணீர் வழங்கப்பட்டிருக்கிறதென தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் வழியாக தகவல் பெறப்பட்டிருக்கிறது.

குடிநீருக்கும், விவசாயத்திற்கும் போதிய நீர் இல்லாத போது, சிப்காட் நிறுவனங்களுக்கு தண்ணீர் வழங்குவதற்கு தடை விதிக்க வேண்டுமென" கேட்டுக்கொண்டார்.இந்த வழக்கினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்த நீதிமன்றம் இன்று விசாரித்தது. மனுதாரர் ராகவனின் மனுவினை தள்ளுபடி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு