செய்தி விவரங்கள்

சம்பந்தனின் வாக்குறுதியை நம்பமாட்டோம்;:கேப்பாபுலவு மக்கள் தலைநகரில் ஆர்ப்பாட்டம்

இராணுவத்தினரால் கபளீகரம் செய்யப்பட்டுள்ள தங்களது காணிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி 119 நாட்களாக முல்லைத்தீவு கேப்பாப்புலவு பகுதியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் இன்றைய தினம் ஸ்ரீலங்கா தலைநகரான கொழும்பிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பு புறக்கோட்டைம த்திய ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று முற்பகல் 11 மணியளவில் நடைபெற்றது.

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு பகுதியில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான மக்களின் காணிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இராணுவ முகாமுக்கு முன்பாக மக்கள் நடத்திவருகின்ற கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் 119ஆவது தினத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில் ஸ்ரீலங்காவின் தலைநகரில் இன்றைய தினம் கூடிய கேப்பாபுலவு மக்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கேப்பாபுலவு மக்களுடன் இணைந்து முன்னிலை சோஷலிசக் கட்சி, சம உரிமை இயக்கம் ஆகியன இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.

தங்களது காணிகளை விடுவிப்பதற்கான திகதியை தங்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்த கேப்பாப்புலவு மக்கள், இனி எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தனோ அல்லது வேறு யாருடைய வாக்குறுதிகளையோ நம்பப்போவதில்லை என்றும் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கேப்பாபுலவு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர் பேரணியாக ஜனாதிபதி செயலகம் வரை படையெடுத்தனர்.

இருந்த போதிலும் பாரிய ஆர்ப்பாட்டங்களைத் தடுக்கும் வகையில் வழமையாக அமைக்கப்படுகின்ற இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டதோடு நீர் பீரங்கித் தாக்குதலை நடத்தும் கனரக வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டன.

எனினும் இதனைப் பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கேப்பாபுலவு மக்களில் சிலர் வீதியை மறிப்பதற்காக வைக்கப்பட்ட இரும்பு வேலிகள் மீதேறி கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்தனர்.

இந்த நிலையில் பொலிஸார் குறுக்கீடு செய்து மகஜரை கையளிப்பதற்காக ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

இதேவேளை ஜனாதிபதி செயலகத்தில் மகஜரை கையளித்ததன் பின்னர் கருத்து வெளியிட்ட சம உரிமை அமைப்பின் செயற்பாட்டாளர் கபிலன், கேப்பாபுலவு நிலமீட்பு போராட்டம் தொடர்பாக இதுவரை எழுத்துமூலமோ அல்லது வேறு வழியிலோ தங்களுக்கு அறிவிக்கப்படவில்லை என்ற அதிர்ச்சித் தகவலை ஜனாதிபதி செயலகம் கூறியதாக தெரிவித்தார்.

மகஜரை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் சமந்தி ரணசிங்க, பிரச்சினையொன்று உள்ளது என்பதை ஏற்றுக்கொண்டதுடன், மீள்குடியேற்றம் மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றை இணைத்து ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடி இதற்கொரு முடிவை அறிவிப்போம் என்றும் வாக்குறுதி அளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு