செய்தி விவரங்கள்

வித்தியா கூட்டுப் பாலியல் படுகொலை தொடர்பான அதிர்ச்சி ஆதாரங்கள்

வித்தியா கொலை வழக்கின் சந்தேகநபர்களுக்கு எதிரான திருத்தப்பட்ட 41 குற்றச்சாட்டுக்களும் நேற்று யாழ் மேல் நீதிமன்றத்தின் பகிரங்க ட்ரயல் அட்பார் மன்றத்தில் மீண்டும் வாசிக்கப்பட்டது. இது தொடர்பில் குற்றவாளியா, சுற்றவாளியா என நீதிபதிகள் வினவியபோது ஒன்பது சந்தேகநபர்களும் தாம் சுற்றவாளிகள் என்றே கூறினர்.

ஆனாலும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த பதில் சட்டமா அதிபர் அவர்கள்,

"சதித்திட்டத்துடனான ஆட்கடத்தல், சதித்திட்டத்துடனான கூட்டு பாலியல் பலாத்காரம், சதித்திட்டத்துடனான கொலை போன்ற மூன்று குற்றங்களையும் புரிந்த முக்கிய சூத்திரதாரிகள் 2ஆம், 3ஆம், 5ஆம், 6ஆம் இலக்க சந்தேகநபர்கள் ஆவார்கள். இந்த நான்கு சந்தேக நபர்களும் குற்றம் புரிவதற்கு ஏனையவர்கள் உடந்தைகளாக இருந்துள்ளனர். வித்தியா பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் அவரின் கழுத்தை இவர்கள் நெரித்துக் கொலை செய்தமை பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

அத்துடன், மாணவியின் தலையின் பின்புறத்திலும் உடலின் பல இடங்களிலும் பலத்த காயங்கள் இருந்துள்ளன. வித்தியாவை ஒவ்வொரு சந்தேகநபரும் பல தடவைகள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியமை மற்றும் அங்கம் சிதைக்கப்பட்டமை மருத்துவப் பரிசோதனைகளில் கண்டறியப்பட்டது.

பாலியல் துஷ்பிரயோக சம்பவம் இடம்பெற்றபோது 5ஆம், 6ஆம் சந்தேகநபர்கள் தொடர்ச்சியாக கையடக்க தொலைபேசியில் அதனை பதிவு செய்து தமது இரண்டு காணொளிகளையும் ஒன்றாக இணைத்து முழுமையான காணொளியொன்றைத் தயாரித்துள்ளனர். இந்தக் காணொளி ஏற்கனவே ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்ட சுவிஸ் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் காணொளி ஒளிப்பதிவு செய்யப்பட்டமைக்கான ஆதாரத்தை என்னால் மன்றில் சமர்ப்பிக்க முடியும்’ எனவும் பதில் சட்டமா அதிபர் கூறினார்.

இங்கு மேலும் குறிப்பிட்ட அவர், சுவிஸ் குமார் இலஞ்சம் கொடுக்க முற்பட்டது தொடர்பான வழக்கு தனியொரு வழக்காக பதிவு செய்யப்படும். அதைவிட சம்பவம் இடம்பெற்றதன் பின்னர் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை சிலர் பாதுகாக்க முயற்சித்து வந்ததாகவும், பாதுகாக்க முயன்றவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்"

காலை ஒன்பது முப்பது மணிக்கு ஆரம்பமான மன்றின் முதல் அமர்வு நிறைவுற்று நண்பகல் வேளையில் விசாரணை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டபோது, தொடர்ச்சியாக 4 மணித்தியாலங்கள் வித்தியாவின் தாயார் கண்ணீர்மல்க சாட்சியமளித்துள்ளார்.

மேலும், அரச பகுப்பாய்வு திணைக்களம் அனுப்பி வைத்த 16 சான்றுப் பொருட்களையும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் அவற்றை ஒவ்வொன்றாக பிரித்து அடையாளம் காணுமாறு வித்தியாவின் தாயாரிடம் கேட்டுக் கொண்டபோது இந்த பொருட்கள் அனைத்தும் தனது மகளுடையது என தாயார் அடையாளம் அடையாளம் காட்டினார். அதன்பின்னர் வித்தியாவின் கிழிந்த பாடசாலைச் சீருடை காண்பிக்கப்பட்டபோது நீண்ட நேரமாக கதறிக் கதறி அழுதுள்ளார்.

மேலும் வித்தியா கொலை வழக்கில் சாட்சியாளர்களாக குறிப்பிடப்பட்டுள்ள 36 பேரில் 32வது சாட்சியாளரைக் கைது செய்து எதிர்வரும் முப்பதாம் திகதி (நாளை சனிக்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதில் ஐந்தாம் சந்தேகநபர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி ஆறுமுகன் ரகுபதி, தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்த வித்தியாவின் தாயாரை குறுக்கு விசாரணை செய்ய முற்பட்டபோது, வழக்கு விசாரணைக்கு தேவையான கேள்விகளை மாத்திரம் கேட்கவும் என்று மூன்று நீதிபதிகளும் கடுமையாக எச்சரித்தனர்.

 

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு