செய்தி விவரங்கள்

யாழில் இடம்பெறும் கவனயீர்ப்பு போராட்டம்: காரணம் இதுதான்! (படங்கள்)

யாழ்ப்பாணம் மாநகர சபையில் நியமனம் பெற்று பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களாக பணியாற்றியவேளையில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட  முறையற்ற இடமாற்ற உத்தரவினை ஆட்சேபித்து, இலங்கையின் சகல பாகங்களிலும் இருந்து வந்த சுகாதார உத்தியோகத்தர்கள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.

இதன்படி யாழ் பண்ணைப் பகுதியில்  இருந்து ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டம் பண்ணையில் அமைந்துள்ள வடமாகாண சுகாதார அமைச்சின் அலுவலகத்துக்கு பேரணியாக வந்து, பின்னர் யாழ்.மத்திய பேருந்து தரிப்பிடத்தை நோக்கிச் சென்று அதன் பின்னர் யாழ் மாநகர சபை முன்றலைச் சென்றடைந்து கவனயீர்ப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக ஏற்ப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாநகர சபையில் நியமனம் பெற்று பணியாற்றியவேளையில் சுகாதார அமைச்சின் ஊடாக ஸ்தாபன விதிக்கு முறையற்ற இடமாற்றம் வழங்கப்பட்டதனைக் கண்டித்து 5 பொதுசுகாதார பரிசோதகர்கள் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த விடயம் நீதிமன்றம் வரை கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 4 மாதங்களாக 5 பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களும் புதிதாக வழங்கப்பட்ட இடத்தில் பணிக்குச் செல்லவில்லவில்லை. 

இவர்கள்  இடமாற்றம் செய்யப்பட்ட இடத்தில் பணியை பொறுப்பேற்காத காரணத்தினால் சுயமாக பணியில் இருந்து விலகியதாக கருதப்படுகின்றீர்கள் என வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளரால்  கடந்த 4ம் திகதி எழுத்து மூலம் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த செயற்பாட்டினை கண்டித்து பொதுசுகாதார பரிசோதகர்கள் ஐவருக்கும் தொடர்ந்து மாநகரசபையிலேயே பணியாற்ற சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இன்றைய தினம் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 500ற்கும் மேற்பட்ட சுகாதார உத்தியோகத்தர்கள், துணை மருத்துவ சேவை உத்தியோகத்தர்கள், தாதிய சங்கத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு