செய்தி விவரங்கள்

தெற்கில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை இனவாதமாக கணிக்க முடியாது -சி.வி.விக்னேஸ்வரன்!

ஸ்ரீலங்காவின் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தெற்கில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை இனவாதமாக கணிக்க முடியாது என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தெற்கில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை இனவாதமாக கணிக்க முடியாது -சி.வி.விக்னேஸ்வரன்!

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன அமோக ஆதரவை பெற்றுள்ள நிலையில், முதலமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

தம்மை யாராலும் அசைக்க முடியாது என இறுமாப்புடன் செயற்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு தேர்தல் முடிவுகள் நெத்தியடியாக அமைந்துள்ளதாக தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆட்சி அமைப்பதில் சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ள இந்த நிலையில் தமிழ்க் கட்சிகள் கொள்கை அடிப்படையில் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வாராந்தம் ஊடகவியலாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகின்றார்.

அந்த வகையில் தேர்தல் முடிவுகளில் தெற்கில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் மீண்டும் இனவாதம் உயிர்ப்புடன் இருப்பதையே தெளிவுபடுத்துவதாக சுட்டிக்காட்டியிருந்த ஊடகவியலாளர்கள் இந்த தேர்தல் முடிவுகள் குறித்த முதலமைச்சரின் கருத்துக்களை கேட்டிருந்தனர்.

இந்த கேள்விக்கு பதிலளித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இத் தேர்தல் முடிவானது வட கிழக்கு மாகாணங்களில் பல கட்சிகளுக்கு வாக்குகள் பிரிந்து சென்றுள்ளதையும் ஒரு சில சபைகளைத் தவிர எந்த ஒரு கட்சியும் உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்க பெரும்பான்மையை பெறமுடியாமல் இருப்பதையும் உணர்த்தி நிற்கின்றது என சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் தமிழ் மக்கள் தமது தலைமைகளின் மீது நம்பிக்கை இழந்து அதிருப்தியாக காணப்படுகின்றார்கள் என்பதையும் இந்த தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டி நிற்பதாக அவர் தெரிவித்தார்.

இந்த தேர்தலின் மூலம் மாற்றம் ஒன்றை மக்கள் விரும்பியிருக்கின்றார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது எனக் குறிப்பிட்ட விக்னேஸ்வரன், இதனால்தான் சில கட்சிகளுக்கு வீழ்ச்சியும் சில கட்சிகளுக்கு எழுச்சியும் ஏற்பட்டிருக்கின்றது எனவும் கூறியுள்ளார்.

சுயநலம் தரக்கூடிய வெளிநாட்டு உள்ளீடல்களால் மக்களுடன் கலந்தாலோசிக்காது பல விட்டுக் கொடுப்புக்களை இன்றைய ஆட்சிக்காக தமிழ் தலைமைகள் ஏற்படுத்திக் கொடுத்தமை தெற்கில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் தமிழர்களை மேலும் பலவீனப்படுத்தி இருக்கின்றதோ என்று சிந்திக்க வைக்கின்றது எனவும் முதலமைச்சர் கவலை வெளியிட்டுள்ளார்.

வடமாகாண சபையின் நிர்வாகங்களைச் சரியான முறையில் செய்யவிடாமல் தமிழரசுக்கட்சியின் ஒரு பகுதியினர் பல இடையூறுகளை ஏற்படுத்தி இருந்ததாக இதன் போது அவர் குற்றம் சுமத்தினார்.

உள்ளூராட்சி சபை தேர்தல், தமிழரசுக்கட்சியையும் அதன் தலைமைகளையும் தம்மைத்தாமே கேள்வி கேட்க வேண்டிய ஒரு நிலைக்குத் தள்ளியுள்ளது என கூறிய வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தம்மை யாராலும் அசைக்க முடியாது என்றிருந்தவர்கள் இந்த தேர்தல் மூலம் நிலநடுக்கத்தை அனுபவித்துள்ளார்கள் என தெரிவித்தார்.

இதேவேளை இந்த தேர்தலின் மூலம் சிங்கள மக்களின் காவலனாய் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வட மாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊழலில் ஈடுபட்டதாக அரசாங்கத்தால் அடையாளப்படுத்தப்பட்டவர்கள் ஏன் சட்டத்தின் முன், முன்னிலைப்படுத்தப்படாத நிலையில், அரசியல் காரணங்களுக்காக மஹிந்த தரப்பினரை ஊழல் பேர்வழிகள் என்று குறிப்பிடப்பட்டார்களா என சிங்கள மக்களிடையே ஒரு கருத்து வலுப்பெற்றிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அதேபோல் நல்லாட்சி அரசாங்கம் மக்களின் பொருளாதார முன்னேற்றத்தில் கரிசனை காட்டாமையும் ஊழலைக் கட்டுப்படுத்த தீர்க்கமான முடிவுகளை எடுக்காமையும் தேர்தல் பின்னடைவுக்கு ஒரு காரணம் எனவும் அவர் தெரிவித்தார். 

தமிழ் மக்களுக்கு ஒரு முகத்தையும் அரசாங்கத்திற்கு மற்றுமொரு முகத்தையும் காட்டிய தமிழ்த் தலைவர்கள் இன்று சந்தேகத்திற்கு உள்ளாகியுள்ளார்கள் எனவும் வட மாகாண முதலமைச்சர் கூறியுள்ளார்.

தமிழ் அரசியல் தலைவர்கள் இடைக்கால அறிக்கையில் இல்லாததை இருப்பதாகக் கூறியமை சிங்கள மக்களின் சந்தேகத்தைக் தோற்றுவித்தது போல் தென்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு ஆளும் கட்சிக்குள் ஊழலும் நிர்வாகச் சீர்கேடும் உள்நுழைந்ததால் பலமுடைய தலைமைத்துவம் இல்லாது இரு தலைமைப் பீடங்கள் இருந்து வந்தமையும் குறையாகக் கூறப்பட்டது எனவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமது கடமை என்ன என்பதில் ஆளும் கட்சி தவறான சிந்தனைகளைக் கொண்டிருந்தமையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நிலையை வலுவூட்டச் செய்தது என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களிடையே ஏற்பட்டுள்ள விரக்தி நிலையை அறிந்தவுடன் எப்படியாவது பதவியைத் தொடர்ந்து காப்பாற்றும் யுக்திகளையே தமிழ் தலைமைகள் மேற்கொண்டுவருவதாக வட மாகாண முதலமைச்சர், குற்றம் சுமத்தினார்.

தமிழ் மக்களின் சிந்தனைகளில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்திருப்பது உண்மையே எனவும் அதனை வெறுப்பு என்பதை தாண்டி, அவநம்பிக்கை என்றே கூற வேண்டும் எனவும் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

தெற்கிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது எனக் குறிப்பிட்ட வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அதனை நாம் இனவாதம் தலைதூக்கியுள்ளதாகக் கணிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

மேலும் மக்கள் நிலை அறியாமல் பதவிகளில் ஒட்டி இருந்தவர்களுக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியைத் தந்துள்ளது என தெரிவித்த வட மாகாண முதலமைச்சர், தமது குறைபாடுகளை சிங்கள, தமிழ் அரசியல்த் தலைவர்கள் மீளாய்வு செய்ய இதுவே தக்க தருணம் எனவும் சுட்டிக்காட்டினார்.

தமிழ்த் தலைமைகள் கட்சிப் பாகுபாடு இன்றி கொள்கையால் ஒன்றுபட்டு அரசாங்கத்திற்கு தமிழர்களின் கருத்துக்களையும் கஷ்டங்களையும் எடுத்துரைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அரசியல் யாப்பு மாற்றங்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என தெரிவித்த வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதில் சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில் தமிழ்க் கட்சிகள் கொள்கை அடிப்படையில் ஒன்றிணையவேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு