செய்தி விவரங்கள்

அதிகாரிகளின் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளே காரணம்: நாமல்

ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஆட்சியின் போது இடம்பெற்ற தவறுகளுக்கு, அரச சேவையிலும், பொலிஸ் திணைக்களத்திலும் கடமையாற்றிய ஒருசில அதிகாரிகளின் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளே காரணமாக அமைந்திருந்ததாக முன்னாள் ஜனாதிபதியின் புதல்வரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்திருக்கின்றார்.

இந்தத் தவறுகளையும் தடுக்கத் தவறியதைற்கான தண்டனையையே முன்னாள் ஆட்சியில் இருந்தவர்களான தாம் தற்போது அனுபவித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிதி மோசடிக் குற்றச்சாட்டு வழக்கொன்றிற்காக இன்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உட்பட மூவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இதற்கமைய பிணை கிடைத்து நீதிமன்றத்திற்கு வெளியில் வந்த நாமல் ராஜபக்ச ஊடகவியலாளர்களை சந்தித்த போது, மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது அரசாங்கம் படையினரைக் கொண்டு மோசமான தாக்குதல்களை நடத்தி அவர்களை ஒடுக்க முற்பட்டுள்ளதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டார்.

தனது தந்தையாரான ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஆட்சியின் போது நாட்டில் ஆங்காங்கே சில  தவறுகள் இடம்பெற்றதாகத் தெரிவித்துள்ள அவர் எனினும் தற்போதைய அரசாங்கத்தைப் போல், அவற்றில் தலையிடவில்லை என்றும் கூறியுள்ளார்.

அரச சேவையிலும், பொலிஸ் திணைக்களத்திலும் கடமையாற்றிய ஒருசில அதிகாரிகளின் தான்தோன்றித் தனமான நடவடிக்கைகளே அன்று இடம்பெற்ற தவறுகளுக்கு காரணமாக அமைந்திருந்ததாகவும் தெரிவித்த நாமல் ராஜபக்ச ஆனால் இன்று அரசாங்கம் உரிமைக்காக போராடிவரும் தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதை முழுமையாகத் தவிர்த்துக் கொண்டு பொலிசாரைக் கொண்டு வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

குழுந்தையொன்றுக்கு செவி மடுக்காவிட்டால் அந்தக் குழந்தை அடம்பிடிப்பதைப் போலவே பல்கலைக்கழக மாணவர்களும் தற்போது நடந்துகொள்வதாகத் தெரிவிக்கும் நாமல் ராஜபக்ச, தற்போதைய மைத்ரி - ரணில் அரசாங்கம் மாணவர்கள் உட்பட மக்களின் பிரச்சனைகளுக்கு செவிமடுக்காது உதாசீனமாக இருக்கும் நடைமுறையையே பின்பற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட நாட்டின் அனைத்துத் தரப்பினரும் இணைந்து நம்பிக்கையுடன் ஆட்சிபீடம் ஏற்றிய அரசாங்கமே இவ்வாறு நடந்துகொள்வதாகவும் தெரிவிக்கும் நாமல் ராஜபக்ச இந்த நிலை தொடர்ந்தால் மக்களே இந்த அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து தூக்கி எறிவார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு