செய்தி விவரங்கள்

தொடருந்து மீது கல்வீச்சு: சந்தேகத்தின் பேரில் அறுவர் கைது!

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி நேற்றுறையதினம் (13.03.2018) செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்ட இரவு நேர விரைவுப் தொடருந்து மீது ஏறாவூரில் வைத்து கல் வீசித் தாக்குதல் நடாத்திய சந்தேகத்தின் பேரில் அறுவர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பிலிருந்து புறப்பட்ட நகர் சேர் கடுகடுதிப் தொடருந்து ஏறாவூர் தொடருந்து நிலையத்தை நெருங்கும்போது சுமார் 8.30 மணியளவில் தொடருந்து பாதையின் இரு மருங்கிலும் நின்று சரமாரியான கல்வீச்சுத் தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளன.

இச்சம்பவத்தில் சொகுசு இருக்கை, இரண்டாம் வகுப்பு உறங்கலிருக்கை பெட்டிகளின் கண்ணாடிகள் நொருங்கியுள்ளதாக ஏறாவூர் தொடருந்து நிலைய அதிபர் கே. குபேந்திரகுமார் தெரிவித்தார்.

இந்த தாக்குதல் காரணமாக நகர சேர் கடுகதி தொடருந்து ஏறாவூரிலிருந்து சுமார் 20 நிமிடங்கள் தாமதமாகியே கொழும்பு நோக்கி பயணத்தைத் தொடர்ந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தொடருந்து என்ஜின் சாரதி மற்றும் உதவியாளரின் அறை, மற்றும் என்ஜினை நோக்கியும் தாக்குதல்கள் இடம்பெற்றதாக அன்றைய தினம் புகையிரத சாரதியாகக் கடமையிலிருந்த டபிள்யூ. சந்திரலால் மற்றும் உதவியாளர் ஏ.எம்.பி.டி.கே. பண்டார ஆகியோர் அறிக்கை செய்துள்ளார். இச்சம்பவம் பற்றி ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் பொலன்னறுவையிலிருந்து மட்டக்களப்பு செல்லும் தொடருந்து மார்க்கத்தில் ஏறாவூரிலேயே விஷமிகளால் அவ்வப்போது கல்வீச்சுத் தாக்குதல்கள் நடாத்தப்படுவதாக தொடருந்து நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுபோன்று கடந்த மாதம் ஏறாவூர் நகரை தொடருந்து ஊடறுக்கும்போது இடம்பெற்ற கல்வீச்சுத் தாக்குதலில் தொடருந்தில் பயணம் செய்த சுகாதாரத் திணைக்கள அதிகாரியொருவர் படுகாயமடைந்துள்ளார் என்றும் அறிக்கையிடப்பட்டுள்ளது.

தொடருந்து பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தும் வண்ணம் இத்தகைய நாசகாரச் செயல்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் இந்த விடயத்தில் ஏறாவூர் பொலிஸாரும் ஏறாவூரிலுள்ள சமூக நல அமைப்புக்களும் கவனம் எடுக்க வேண்டும் என்றும் தொடருந்து பயணிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு