செய்தி விவரங்கள்

ரணில் விக்கிரமசிங்கவை கூண்டில் நிறுத்த வேண்டும்;வாசுதேவ

ரணில் விக்கிரமசிங்கவை கூண்டில் நிறுத்த வேண்டும்;வாசுதேவ 

இலங்கை மத்திய வங்கி ஊழல் மோசடியுடன் தொடர்புடைய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை விரைவில் கைது செய்வதோடு அவருக்காக வக்காளத்து வாங்கிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணி வலியுறுத்தியுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற இனங்களுக்கு இடையிலான மோதல்களுக்கு மத்தியில் மத்திய வங்கி மோசடியாளர்கள் மீதான விசாரணைகள் கிடப்பில் இடப்பட்டதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, விரைவில் குற்றவாளிகளை கைது செய்யும்படியும் கோரிக்கை விடுத்தார்.

ஒன்றிணைந்த எதிர்கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இன்று புதன்கிழமை பகல் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினரான வாசுதேவ நாணயக்கார, அண்மையில் இடம்பெற்ற இனங்களுக்கு இடையிலான பிரச்சினையினால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே அதிக இலாபத்தை அடைந்திருப்பதாகக் கூறினார்.

“இனங்களுக்கு இடையிலான பிரச்சினைக்கு மத்தியில் மற்றொரு சூழ்ச்சி மறைந்திருக்கும் என்பது இடதுசாரிகளின் கருத்தாகும். அதனை தெளிவாகக் கூறினால் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் பிரதமர் தொடர்பான அர்ஜுன மகேந்திரனின் பிரச்சினையாகும்.

அவர் தொடர்ந்தும் தலைமறைவாகியிருக்கின்ற நிலையில் அவரை நாட்டிற்கு அழைத்துவருவதாக வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் பிரதமர் நெருக்கடியில் சிக்கியுள்ளார். இவை அனைத்தும் மூடிமறைக்கப்பட்டு இனப்பிரச்சினை தற்போது மேலெழுந்துள்ளது.

இனங்களுக்கு இடையிலான பிரச்சினை தீர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். இதனால் இலாபமடைந்தவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கதான். அவருக்கெதிராக இருந்த எதிர்ப்புக்கள் கீழாக்கப்பட்டுள்ளன.

இனங்களுக்கு இடையிலான பிரச்சினையை தீர்த்துக்கொண்டு இந்த நாட்டிலுள்ள முக்கிய பிரச்சினைகளை நோக்கினால் மத்திய வங்கியில் மோசடி செய்த அர்ஜுன மகேந்திரனை உடனடியாக நாட்டிற்கு அழைத்துவந்து சட்டநடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதோடு அதற்கான பிணைக்காக முன்வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உடனடியாக நீதிமன்றத்திற்கு முன்பாக அழைக்கப்பட வேண்டும்” என்றார்.

இதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தொடர்ந்தும் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, அண்மையில் நிறைவேற்றப்பட்ட காணாமல் ஆக்கப்படுதலை குற்றமாக்கும் சட்டத்தில் சர்வதேச நீதிப்பொறிமுறையை ஸ்ரீலங்கா பிரஜைகள் மீது அமுல்படுத்த முடியாது என்ற திருத்தத்தை கொண்டுவரும்படி கோரிக்கை விடுத்தார்.

 “ஜெனிவாவிலுள்ள மனித உரிமைகள் ஆணையாளர் அல் ஹுசைன் சர்வதேச நீதிமன்றத்திற்கு முன்பாக ஸ்ரீலங்காவை நிறுத்த வேண்டுமென மீண்டும் கூறியிருக்கின்றார். அண்மையில் நிறைவேற்றப்பட்ட காணாமல் ஆக்கப்படுதலை குற்றமாக்கும் சட்டத்தில் அவ்வாறு வெளிப்படையாக கூறப்பட்டிருக்காவிட்டாலும் சர்வதேச நீதிமன்ற முறையை ஸ்ரீலங்காப் பிரஜைகள் மீதும் அமுல்படுத்த முடியும் என்ற பிரிவு காணப்படுகின்றது.

சர்வதேச நீதிப்பொறிமுறை ஸ்ரீலங்கா பிரஜைகளுக்கு அமுல்படுத்த முடியாது என்ற திருத்தத்தை அரசாங்கம் கொண்டுவந்திருக்கலாம். எனினும் இதனையும் செய்யாமல்தான் இது நிறைவேற்றப்பட்டது. உண்மையிலேயே சர்வதேச அழுத்தங்களுக்கு நாட்டின் இறைமையை ஸ்ரீலங்கா அரசாங்கம் பலிகொடுக்காவிட்டால் உடனடியாக காணாமல் ஆக்கப்படுவதை குற்றமாக்கும் சட்டத்தில் குறித்த திருத்தத்தை கொண்டுவரும்படி கோருகிறோம்” என்று அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு