செய்தி விவரங்கள்

ஸ்ரீலங்கா கடற்படையினரின் தாக்குதல்கள் குறித்து தமிழகம் கரிசனை

ஸ்ரீலங்கா கடற்படையினரால் தமிழக மீனவர்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளமை குறித்து தமிழக அரசு கரிசனை வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள 42 தமிழக மீனவர்களையும் மத்திய அரசாங்கம் தலையிட்டு விடுவிக்க வேண்டும் எனவும் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதமொன்றின் ஊடாக வலியுறுத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா கடற்படையினரால் கடந்த 24 ஆம் திகதி தமிழக மீனவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் தமிழக முதலமைச்சர் நரேந்திர மோடியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

பாரம்பரிய மீன்பிடிப் பகுதியான பாக்குநீரிணையில் மீன்பிடித்துவரும் தமிழக மீனவர்களை ஸ்ரீலங்கா கடற்படையினர் கடத்திச் செல்கின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலைமையை மாற்றும் வகையில் ஸ்ரீலங்கா அரசாங்கத்துடன் இந்தியா தூதரக ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் இந்த மனிதநேயமற்ற செயற்பாடுகளால் மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பாரிய வாழ்வாதார இழப்பை சந்தித்துள்ளனர் எனவும் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

கடந்த 24 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட 14 மீனவர்கள் உள்ளடங்கலாக ஸ்ரீலங்கா சிறையிலுள்ள 42 மீனவர்களையும் சிறைபிடிக்கப்பட்ட 141 படகுகளையும் விடுவிக்கும் விடயத்தை ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் உயர்மட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் தமிழக முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

கச்சதீவு குறித்த இந்திய – இலங்கை சர்வதேச எல்லைகோடு விவகாரம் நீதிமன்றத்தில் வழக்காக நிலுவையில் உள்ளதெனவும் தமிழக முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு