செய்தி விவரங்கள்

இலங்கை அமைச்சரவை மாற்றம் நாளை!

இலங்கை அமைச்சரவை மாற்றம் நாளை!

ரணில் - மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை மாற்றம் தொழிலாளர் தினமான நாளைய தினத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2015ஆம் ஆண்டில் ஆட்சிக்குவந்த நல்லாட்சி அரசாங்கம் தமது 3ஆவது ஆட்சிவருடத்தில் செய்கின்ற 4ஆவது அமைச்சரவை மாற்றம் இதுவென்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை அடுத்து கட்சித் தீர்மானத்திற்கு முரணாக முடிவெடுத்து தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திரக் கட்சியின் 6 அமைச்சர்கள் உட்பட 16 பேர் நல்லாட்சி அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து வெற்றிடமாகக் காணப்பட்ட 6 அமைச்சுக்களுக்காக அமைச்சர்கள் நால்வரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்காலிகமாக நியமித்திருந்தார்.

அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் சித்திரை புதுவருடத்திற்கு முன்னதாக நல்லாட்சி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட போதிலும், மே முதலாம் திகதியன்று புதிய அமைச்சரவை நியமிக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

இதேவேளை 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி ஆட்சிக்குவந்h ரணில் - மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசின் 100 நாள் வேலைத் திட்டத்தின்கீழ் அமைச்சரவை உருவாக்கப்பட்டது.

அதேவருடத்தில் ஓகஸ்ட் 14ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டதை அடுத்து புதிய அமைச்சரவை உருவாக்கப்பட்டது.
இவ்வாறு உருவாக்கப்பட்ட அமைச்சரவையில் சிறு மாற்றம் அண்மையில் ஏற்படுத்தப்பட்ட நிலையில் 4ஆவது முறையாக அமைச்சரவை மாற்றம் நாளை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு