செய்தி விவரங்கள்

ஸ்ரீலங்காவிற்கான வேலைவாய்ப்பு கோட்டாவை அதிகரிக்க தென்கொரியா இணக்கம்

ஸ்ரீலங்காவில் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு கோட்டாவை அதிகரிப்பது குறித்து தனது நாடு கவனத்திற்கொள்ளுமென தென்கொரியாவின் மனிதவள அபிவிருத்தி சேவை தலைவர் போராசிரியர் பார்க் யங் பம் தெரிவித்தார்.

விவசாயத்துறையில் உள்ள ஸ்ரீலங்கா தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு கோட்டாவை அதிகரிப்பதற்கான சாத்தியப்பாடு குறித்து ஜனாதிபதி வினவியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பேராசிரியர் பார்க், நேற்றைய தினம் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்த போது இந்த விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது.

கொரியாவில் 25,000 க்கும் மேற்பட்ட ஸ்ரீலங்கா நாட்டவர்கள் தொழில் செய்வதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்தார். இலங்கைக்கான வருடாந்த வேலைவாய்ப்பு கோட்டா தற்போது 6,000 எனத் தெரிவித்த அவர், கொரியாவுக்கு தொழிலாளர்களை அனுப்பும் 16 நாடுகளில் ஸ்ரீலங்கா தற்போது 5ஆவது இடத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா தொழிலாளர்களின் செயலாற்றுகை மற்றும் வினைத்திறன் குறித்து கொரிய தொழில் வழங்குனர்கள் திருப்தியடைந்துள்ளதாகத் தெரிவித்த பேராசிரியர் பார்க், விவசாயத்துறையில் இந்த நாட்டவர்களுக்கான வேலைவாய்ப்புக் கோட்டாவை அதிகரிப்பதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து ஆராயவுள்ளதாகத் தெரிவித்தார்.

அண்மையில் கொரியாவில் கட்டடமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தின் போது தனது உயிரைப் பணயம் வைத்து பெண் ஒருவரைக் காப்பாற்றிய ஸ்ரீலங்கா ஊழியரின் செயல் காரணமாக கொரியாவில் ஸ்ரீலங்கா ஊழியர்கள் பிரபல்யம் பெற்றிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு