செய்தி விவரங்கள்

தபால் தொழிற்சங்கள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளன

நாடளாவிய ரீதியில் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் முன்னெடுத்துள்ள காலவரையறையற்ற  தொழிற்சங்க நடவடிக்கையால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை தபால் வல்லுநர் சங்கம், தேசிய தபால் தொழிற்சங்கம் மற்றும் இலங்கை தபால் சேவைகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளன.

தபால் ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்ட இந்த பணிபுறக்கணிப்பு நடவடிக்கையால் புகையிரத போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நுவரெலியா, காலி, கண்டி ஆகிய இடங்களிலுள்ள தபால் நிலைய கட்டடங்கள் உள்ளிட்ட பல கட்டடங்களை ஹோட்டல் நிர்மாணத்திற்கு வழங்கும் அரசாங்கத்தின் தீர்மானம் கைவிடப்பட வேண்டும்,

தற்போது தனியார் கட்டடமொன்றில் கூலிக்கு நடத்திச் செல்லப்படும் பிரதான தபால் நிலையம் அதிலிருந்து அகற்றப்பட்டு கொழும்பில் ஜனாதிபதி மாவத்தையில் அமைந்துள்ள பிரதான தபால் காரியாலயத்தில் அமைக்க வேண்டும், மற்றும் 2006ஆம்6.6 இலக்க சுற்றுநிருபத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வாக தபால் சேவைக்கு ஊழியர்களை இணைத்துக் கொள்வதில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகயும் முன்வைத்து இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிஷ்கரிப்பினால் ஹட்டன், வட்டவல, நுவரெலியா மற்றும் நானுஓயா உட்பட பல தபால் நிலையங்கள் செயலிழந்து காணப்படுகின்றன.  

இதனால், தற்போது உயர் தரம் சித்திபெற்ற மாணவர்களது பல்கலைக்கழக அனுமதி கடிதங்கள் பல்கலைகழக மாணிய ஆணைக்குழுவினால் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கும் மாபொல புலமை பரிசில் கடிதங்கள் போன்றன தேங்கி கிடைக்கும் நிலை காணப்படுவதனால் பல்கலைகழகத்திற்கு தெரிவானவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேலை நிறுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவர உடனே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை வவுனியா அஞ்சல் அலுவலக பணியாளர்களும் இன்று முதல் தமதுபணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர்.

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்படும் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வவுனியா மாவட்ட தபால் ஊழியர்களும் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த பணி புறக்கணிப்பு நடவடிக்கை காரணமாக பொது மக்கள் பலரும் சிரமங்களை எதிர்கொள்வதாக விசனம் வெளியிட்டுள்ளனர்.

அந்தவகையில் கிழக்கு மாகாணத்திலும் தபாலகங்கள் பூட்டப்பட்டு ஊழியர்கள் தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர். 

இதேவேளை, கொழும்பிலும் தபால் ஊழியர்கள் பணி புறக்கணிப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதே கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 13ஆம் திகதியும் நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

எவ்வாறாயினும், தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடின் தொடர்ச்சியாக பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும் என இலங்கை தபால் சேவைகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு